ஊழல் இல்லாத ஆட்சி, கருப்புப்பண மீட்பு என்ற இருமுக்கிய வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
தானாக முன்வந்து கருப்புப்பணத்தை தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.65 ஆயிரம் கோடி கருப்புப்பணம் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இதற்குமுன்பு எந்த அரசும் இந்த அளவுக்கு அதிகமான கருப்புப்பணத்தை மீட்டது இல்லை. தானாக முன்வந்து கருப்புப் பணத்தை தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.65 ஆயிரம்கோடி மீட்கப்பட்டது மட்டுமல்லாது, கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகள் மூலமும் மொத்தமாக ரூ.1.40 லட்சம் கோடி கருப்புப்பணம் மீட்கப்பட்டுள்ளது. இந்தப்பணம் கிராமப்புற மேம்பாடு, ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்காக செலவிடப்படும். ஊழல் இல்லாத ஆட்சி, கருப்புப்பண மீட்பு ஆகிய இரு முக்கிய வாக்குறுதிகளையும் மோடி தலைமையிலான அரசு மிகக்குறுகிய காலத்திலேயே நிறைவேற்றியுள்ளது. கருப்புப்பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.


நிலக்கரிச் சுரங்க ஏலம் மிகவும் வெளிப்ப டையான முறையிலும், எவ்வித முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமலும் நடை பெற்றுள்ளது. பயனாளிகளுக்கு நேரடியாக மானியங்களை வழங்கும் திட்டத்தின் மூலம் அரசுக்  கருவூலத்தில் இருந்து பணம்வீணாக செலவழிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
5 கோடி ஏழைப் பெண்களுக்கு சமையல் எரி வாயு இணைப்பு புதிதாக வழங்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஒருகோடிக்கும் மேற்பட்டோர் தங்கள் சமையல் எரி வாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply