கூட்டணி அமையாவிட்டால் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று உலகமகளிர் தின விழா நடைபெற்றது. தமிழிசை சவுந்தர ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதரராவ், டாக்டர் கமலா செல்வராஜ், நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன், பாடகி சின்மயி, நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது திருநங்கை அப்சரா பாஜகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது:

திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என கருணாநிதி கூறியிருக்கிறாரே?

அது அவரது நம்பிக்கை. அதற்கு பதில்சொல்ல விரும்பவில்லை.

கூட்டணி அமைப்பதில் ஏன் இந்த தாமதம்?

தமிழகத்தில் ஒருமாற்றம் வேண்டும் என்பதற்காக கடந்த மக்களவை தேர்தலைப் போல வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்துவருகிறோம். இல்லையெனில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. அந்த அளவுக்கு பாஜக வலுவாக உள்ளது.

பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடத்த வில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாரே?

தேமுதிகவுடன் இருமுறை பேசினோம். பாமகவுடனும் பேசினோம். கூட்டணிக்கு அழைப்புவிடுப்பது பலத்தை அதிகரிக்கவே. இதனாலேயே எங்களை பலவீன மானவர்களாக யாரும் கருதி விடக் கூடாது.

பாஜக கூட்டணி தொடர்பாக பல்வேறு செய்திகள் வருகிறதே?

யூகங்கள் அடிப்படையிலான கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்ப வில்லை. வரும் தேர்தலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

Leave a Reply