பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வாபஸ்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதில் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.


தில்லியில் புதன் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லும் என்று அறிவிக்குமாறு எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.


ஆனால்தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் பழக்கம் பிரதமர் மோடியின் ரத்தத்தில் இல்லை. இந்தவிவகாரத்தை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்துவருகின்றன.


இத்தகைய திடீர் அறிவிப்பால் மக்கள் எதிர் கொண்டுவரும் சிரமங்கள் குறித்து மத்திய அரசுக்கு தெரியும்.
இந்த விவகாரத்தில் மக்களின் பிரச்னைகளைத்தீர்க்க வேறு ஏதேனும் புதியயோசனைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கலாம். அத்தகைய கருத்துகளை வரவேற்போம்.


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் தேவையில்லாமல் அமளியில்ஈடுபட்டு விவாதத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் ஓடி ஒளிகின்றன.


உரி பயங்கரவாதத் தாக்குதலின்போது வீரமரணம் அடைந்தவர்களுடன் அதிகமதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளுக்குச் சென்றபோது உயிரிழந்தவர்களைத் தொடர்புப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் பேசியது வெட்கக்கேடானது; துரதிருஷ்டவசமானது.


அதிக மதிப்புடைய ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டதன் மூலம் விளிம்புநிலை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பலன்கிடைக்கும். அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னதன் மூலம், பலர் அழவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர். புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

 

Tags:

Leave a Reply