சென்னை அருகே உள்ள எண்ணூர் துறை முகத்துக்கு கடந்த 28-ந் தேதி கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும், எரிவாயு ஏற்றிவந்த கப்பலும் வந்தது. துறைமுகத்துக்குள் செல்வதற்கான அனுமதிக்காக அந்தகப்பல்கள் துறைமுகத்துக்கு அப்பால் நடுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது இருகப்பல்களும் மோதிக்கொண்டன.

இதில் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பல் சேதம் அடைந்து அதில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில்கலந்து பெருமளவிலான மாசுவை ஏற்படுத்தி உள்ளது.

எண்ணூர் தொடங்கி திருவொற்றியூர், ராயபுரம், மெரீனா, சாந்தோம், பெசன்ட்நகர், திருவான்மியூர் நீலாங்கரை என கிழக்குகடற்கரை வரை எண்ணெய்படலம் பரவி மாசு ஏற்படுத்தியுள்ளது. இந்த எண்ணெய்படலத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தீயணைப்பு வீரர்கள் தவிர கடலோர காவல்படைவீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோருடன் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்களும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது வரை 104 டன் எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் இருந்து 2 நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணெய் படலத்தை உறிஞ்சும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், மக்களவையில் இன்று மத்திய கப்பல்போக்குவரத்து துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் இதுபற்றி விளக்கம் அளித்தார்.

அப்போது, எண்ணூரில் கப்பல்கள் மோதி எண்ணெய்கசிவு ஏற்பட்டதில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் எண்ணெய்படலத்தை அகற்றும் பணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், எண்ணெய்படலத்தை அகற்றும் பணியில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதாகவும், இன்னும் ஓரிருநாளில் பணி முடிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply