சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 27-ந்தேதி நள்ளிரவு எரிவாயுவை இறக்கி விட்டு ஈரான் நாட்டு சரக்குகப்பல் ஒன்று அங்கிருந்து வெளியேறியது.
அப்போது, மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூர் துறைமுகத்தை நோக்கிவந்த ‘டான் காஞ்சீபுரம்’ என்ற சரக்குகப்பல் மீது ஈரான் சரக்குகப்பல் (பி.டபிள்யூ. மேப்பில்) பயங்கரமாக மோதியது.
துறைமுகத்தில் இருந்து சிறிது தொலைவில் நடந்த இந்தவிபத்தில் ‘டான் காஞ்சீபுரம்’ கப்பல் சேதம் அடைந்து, அதில் இருந்த டீசல் கடலில்கொட்டியது. இந்த டீசல் சென்னையையொட்டி உள்ள கடற்பரப்பில் மிதக்கிறது. திருவொற்றியூர் பாரதியார்நகர் அருகே அதிகப்படியான டீசல் படிந்து இருக்கிறது.
அலைகளால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் டீசல்படிமத்தை அகற்றும்பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. திருவொற்றியூர் பாரதியார் நகரில் கடலோர காவல்படையின் சுற்றுச்சூழல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரகவளர்ச்சி துறையினரும், பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்களும் படிந்திருக்கும் டீசலை வாளிகள் மூலம் அகற்றி வருகின்றனர்.
இதுதவிர ஏராளமான தன்னார்வலர்களும் களத்தில்இறங்கி டீசல்படிமத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்தபணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஆய்வு செய்துவருகிறார். கடற்பரப்பில் டீசல்படிமம் மிதக்கும் இடத்தை சுற்றிலும் ‘பூம்’ எனப்படும் ரப்பர்மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரை மணற்பரப்பில் படிந்திருக்கும் டீசலும் மூட்டை, மூட்டையாக அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்தியசாலை போக்குவரத்துறை மந்திரி நிதின்கட்கரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எண்ணூரில் கப்பல்கள் மோதல்குறித்து குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின்னரே உரியநடவடிக்கை எடுக்கப்படும். எண்ணெய் கழிவுகளை அகற்றும்பணியில் ஈடுபட்டுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.