திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல் அதிகரித்து வரும் வேளையில் அவர்களில் யாராவது குடியுரிமை திருத்தசட்டம் குறித்து தங்களது கருத்தை மாற்றிக்கொள்ள விரும்பினால், அவர்களை அரவணைக்க பாஜக தயாராக உள்ளது என பாஜகவைச் சேர்ந்த, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சித்தார்த்நாத் சிங் சென்னையில் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தசட்டம் குறித்து எதிர்க் கட்சியினர் தவறான கருத்துகளை பரப்பிவருவதாகவும், அந்தசட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பாஜக இந்தியா முழுவதும் நடத்தி வருவதாகவும் தெரிவித்த சித்தார்த் நாத்சிங், அந்த நிகழ்ச்சிகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ”திமுக – காங்கிரஸ் மத்தியில் விரிசல் அதிகரித்துள்ளது. எதிர் கட்சியாக உள்ளவர்கள் தங்களது கருத்தை மாற்றிக் கொள்வதில் தவறில்லை. அவர்கள் மாற்றி கொண்டால், அவர்களை அரவணைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களை வரவேற்போம். கருத்துகளை மாற்றிக் கொண்ட பல எதிர்க்கட்சி தலைவர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்,”  எதிர்க்கட்சியினர் பலரும் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் தற்போது குடிமக்களாக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்புஇருப்பதாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

‘குடியுரிமை சட்டம்பற்றி தவறாக பரப்பப்படும் கருத்துகள் என்ன, அரசாங்கம் உண்மையில் என்ன விதத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றியுள்ளது என தெளிவாக விளக்கி கையேடு ஒன்றை உருவாக்கியுள்ளோம். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இந்தகையேடுகளை தருகிறோம். சுமார் மூன்று கோடி குடும்பங்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் இலக்கு,”

”பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது என்பதை அந்த நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையாக உள்ள மக்கள், இந்தியா வருவதில் பிரச்சனை இல்லை. இதனை புரிந்துகொள்ளாமல் ஊடகங்களில் எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள்,” என்றார் அவர்.

Comments are closed.