ரூ.2 ஆயிரம் கோடி செலவில் கங்கை நதியை துய்மைப்படுத்தும் திட்டம்  தொடங்கியது.புண்ணிய நதி, புனித நதி, இந்தியாவின் தேசியநதி என்ற சிறப்புகளுக்கு உரியது, கங்கை . உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் என 5 மாநிலங்களில் 2,525 கி.மீ. தொலை வுக்கு பாய்கிற கங்கை நதி, இப்போது மாசுபட்டிருக்கிறது. அதன் 25 சதவீத தண்ணீர் தான் தூய்மையானது, மீதி மாசுபட்டது என்று சொல்லப்படுகிறது.

இந்தபுண்ணிய நதியை தூய்மைப்படுத்துவோம் என்பது பாராளுமன்ற தேர்தலின்போது பாரதீய ஜனதா கட்சி அளித்த தேர்தல்வாக்குறுதி மட்டுமல்ல, கனவுத்திட்டமும் கூட.

வாரணாசிதொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, “கங்கை நதியை என் தாயாக கருதி வணங்குகிறேன். என் ஆட்சிகாலத்தில் இந்த கங்கை நதி தூய்மைப் படுத்தப்படும்” என அறிவித்தார். அதற்கேற்ப திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன.

கங்கை நதியை தூய்மைப்படுத்து வதற்காக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 300 திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்ததிட்டங்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்து வாரில் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன.

இதை மத்திய நீர்வளத் துறை மந்திரி உமாபாரதி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் அறிவித்தார்.இதுபற்றி அவர் கூறியதாவது:-

கங்கை நதியை சுத்திகரிப்பதற்கு மலைகளை மேம்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைத்தல், தோட்டங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பலதிட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களை ஹரித்து வாரில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத்  தொடங்கிவைக்கிறார். இந்த விழாவில் நான் பங்கேற்கிறேன். மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, சவுத்ரி வீரேந்தர் சிங், மகேஷ் சர்மா மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டப்பணிகள் ஒரே நேரத்தில் 104 இடங்களில் தொடங்குகின்றன. இவை அனைத்தும் கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டத்துடன் இணைந்தவை. ஆனால் முக்கிய நிகழ்ச்சி, ஹரித்து வாரில் நடப்பதுதான்.

கங்கை நதியை சுத்தம்செய்யும் திட்டப்பணிகள் உத்தரபிரதேச மாநிலம் நரோரா, கான்பூர், மதுரா, அலகாபாத், வாரணாசி மற்றும் பீகார், மேற்குவங்காள மாநிலங்களில் பலஇடங்களில் தொடங்குகிறது. கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடர்ந்துநடைபெறும். எனது நோக்கம், கங்கையை தூய்மைப்படுத்துவதுதான்.

கங்கைக்கரைகளில் வசிக்கிற மக்களிடையே கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply