என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராவது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜான்கீவுடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

அணு எரிபொருள் விநியோக கூட்டமைப்பான என்எஸ்ஜி-ல் இணைய இந்தியா விண்ணப்பித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூனில் சியோலில் நடந்த என்.எஸ்.ஜி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

45 உறுப்பினர்கள் கொண்ட என்.எஸ்.ஜி.,யில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பெரும் பான்மை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளித்தன. ஆனால் சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட சிலநாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தியாவின் முயற்சி வெற்றியடைய வில்லை.

இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜான்கீ 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று அவருக்கு சிவப்புகம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் ஜான்கீயும் சந்தித்து பேசினர். அப்போது என்எஸ்ஜி., சர்வதேச தீவிரவாதம், இருதரப்பு உறவை மேம்படுத்து வது உட்பட பல்வேறு விவகாரங் கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பது உட்பட 3 ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.

இதன்பின் இருதலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி யளித்தனர். அப்போது ஜான் கீ கூறியபோது, என்எஸ்ஜி.யில் இந்தியா இணைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந் துள்ளோம். இதுகுறித்து நியூ சிலாந்து ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கடைப்பிடிக் கும். இதர உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி பேசியபோது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக நியூசிலாந்து ஆதரவு அளித்துள்ளது. அதற்காக பிரதமர் ஜான் கீ-க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இருநாட்டு வர்த்தக உறவை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Leave a Reply