என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய உதவுவதாக பிரதமர் நரேந்திரமோடியிடம் பிரேஸில் அதிபர் மிஷெல் டெமர் உறுதியளித்துள்ளார்.


கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேஸில் அதிபர் மிஷெல்டெமர், இந்தியா வந்துள்ளார். அவரும் பிரதமர் நரேந்திரமோடியும் கோவாவில் திங்கள் கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயங்கர வாதத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக பிரேஸிலுக்கு பாராட்டும், நன்றியும்தெரிவிப்பதாக மோடி தெரிவித்தார்.

மேலும் என்எஸ்ஜி எனப்படும் அணு சக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கான இந்தியாவின் விருப்பத்தை எடுத்துக்கூறினார். அப்போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் விருப்பதைப் புரிந்து கொண்டதாகவும், என்.எஸ்.ஜி-யில் இந்தியா இணைவதற்கு மற்றநாடுகளுடன் இணைந்து பிரேஸில் பாடுபடும் என்று டெமர் குறிப்பிட்டார்.

இதற்காக அவருக்கு மோடி நன்றி தெரிவித்தார் என்று வெளியுறவுத்துறையில் கிழக்கத்திய நாடுகள் விவகாரத்தை கவனிக்கும் செயலாளரான பிரீத்திசரண் தெரிவித்தார்.பிரேஸில் அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:பாரபட்சம் பார்க்காமல் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதில் உலகம் இணைந்து செயலாற்றவேண்டும் என்று நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா. தீர்மானம் விரைவில் நிறைவேறு வதற்காக பிரேஸிலுடன் இந்தியா தொடர்ந்து பாடுபடும்.

இருதரப்பு ரீதியிலும் முத்தரப்பு ரீதியிலும் இந்தியாவுக்கும், பிரேஸிலுக்கும் இடையிலான தோழமையானது வர்த்தகவாய்ப்புகளால் நிரம்பியுள்ளது. இருநாடுகளும் போதைமருந்து கட்டுப்பாடு, வேளாண் ஆராய்ச்சி, இணைய வெளிப் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் ஒத்துழைத்துச் செயல்படுவதில் முன்னேற்றம் கண்டுள்ளன.

ஐ.நா. சபை, ஜி-20 கூட்டமைப்பு, உலகவர்த்தக அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.இந்தியாவும் பிரேஸிலும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் வரைவை இறுதி செய்யும் கட்டத்தில் இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சிறப்பான முறையில் வளர்ந்துள்ளன. அனைத்து மட்டங்களிலும் தொடர்புகளும் அதிகரித்துள்ளன. இருநாடுகளின் சிறப்பு உறவுகள் 10 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், பிரேஸில் அதிபரின் இந்தியப் பயணம் நிகழ்ந்துள்ளது. பிரேசில் அதிபரும் நானும் இரு நாட்டு நிறுவனங்களின் தலைவர்களுடன் சந்தித்துப் பேசியுள்ளோம். இருதரப்பு தொழில்-வர்த்தக உறவுகளை மேம்படுத்த அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளால் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம்.


பிரேஸிலின் உள்நாட்டு பொருளாதார செயல் திட்டத்துக்கு புத்துயிரூட்டுவதில் இந்தியா மதிப்புமிகு கூட்டாளியாகச் செயல்படமுடியும். இந்தியாவில் முதலீடு செய்யவருமாறு பிரேசில் நிறுவனங்களை நான் அழைக்கிறேன் என்றார் மோடி.


இந்தியாவில் மாற்றங்கள்: பிரேஸில் அதிபர் டெமர், செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களது வர்த்தக பிரதிநிதிகளின் சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடுசெய்வதற்கு பிரேஸில் வர்த்தகர்கள் தரப்பில் தீவிர ஆர்வம் காட்டியதை கவனித்தோம். பிரேஸிலில் முதலீடு செய்யுமாறு இந்திய முதலீட்டாB ளர்களை நாங்கள் அழைக்கிறோம். இந்தியா கடந்த சிலஆண்டுகளாக சிறப்பான மாற்றங்களைச் சந்தித்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம்' என்றார்.

4 ஒப்பந்தங்கள் கையெழுத்து.


பிரதமர் மோடி, பிரேஸில் அதிபர் டெமர் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.மரபணு வளங்கள், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, இயற்கைவளங்கள் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது முதலாவது ஒப்பந்தமாகும். மருந்துப்பொருள் கட்டுப்பாடு, கால்நடை மரபியல், முதலீட்டு ஒத்துழைப்பு ஆகியவை மற்ற மூன்று ஒப்பந்தங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply