நேர்மை, தேசப்பற்றுக்கு இணையான வார்த்தையாக சவுகிதார் மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

நாடுமுழுவதிலும் உள்ள 25 லட்சம் காவலாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியிலிருந்து வீடியோவசதி மூலம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

சவுகிதார் என்ற வார்த்தை நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது. ஆனால் காவலாளிகள் திருடர்கள் என்ற அர்த்தத்தில் சிலர் பேசிவருகின்றனர். நாடுமுழுதிலும் உள்ள காவலாளிகளை, இதன்மூலம் ராகுல்காந்தி அவமதித்து விட்டார்.

என்னை நேரடியாகத் தாக்க எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை. அதனால்தான் காவலாளி என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். காவலாளி என்ற வார்த்தைக்கு இப்போது தேசப்பற்று, நேர்மை என்ற அர்த்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

நாட்டுக்காக பணிசெய்பவர்களை அவர்கள் வெறுக்கிறார்கள். நாளை யார் பிரதமராக வந்தாலும், அவர்களையும் இப்படித்தான் இழிவுபடுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார். சிலநாட்களுக்கு முன்பு நானும் காவலாளிதான் என்று பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து காவலாளி திருடன் என்ற ரீதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்தார். இதைத் தொடர்ந்தே நேற்றைய நிகழ்ச்சியில் ராகுல்காந்தியை மறைமுகமாக பிரதமர் மோடி தாக்கிப் பேசினார்.

Leave a Reply