பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள, தமிழக பாஜக தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான டாக்டர்.தமிழிசை சவுந்தர ராஜன், தொண்டர்களை தாக்கினால் நான் சும்மாவிடமாட்டேன், என்று தெரிவித்துள்ளார். 

அண்ணா நகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சுரேஷ்கர்ணா தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவந்த, பத்மநாபன் என்பவரை சிலர் தாக்கினார்கள். படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

திமுக. வேட்பாளர் தன சேகரனின் ஆதரவாளர் பசுபதிமகன் தென்னரசு என்பவர் பத்ம நாபனை தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்தசம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சவுந்தர ராஜன், “எதை வேண்டுமென்றாலும் நான் பொறுத்துகொள்வேன். என் கட்சி தொண்டனுக்கு ஒன்று என்றால் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டேன். தொண்டரை தாக்கியவர்கள் மீது இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தும் இன்னும் தென்னரசு கைது செய்யப்பட வில்லை. அடிபட்ட பத்மநாபன் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு என்னிடம் அழுகிறார்கள். காவல் துறையும், தேர்தல் ஆணையமும் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply