மதுரையில் நாளை ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப் பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரசு தேர்வுசெய்தது. இங்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க பல்வேறு இடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இறுதியாக அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற மதுரை திருப்பரங் குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் தொடங்கின. இந்த மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. மதுரை மண்டேலா நகரில் நடை பெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடை பெறும் இந்தவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர்கள் நட்டா பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

இதே விழாவில் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகளையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனிவிமானம் மூலம் நாளை காலை டெல்லியில் இருந்து புறப்படுகிறார். பகல் 11.20 மணிக்கு விமானம் மதுரை வந்தடைகிறது.

விமான நிலையத்தில் இருந்து கார்மூலமாக பிரதமர் மோடி, 3 கி.மீ. தொலைவில் உள்ள மண்டேலா நகர் செல்கிறார். பின்னர் விழாவில் பங்கேற்று ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அரசு விழா நடை பெறும் இடத்தின் அருகே நடைபெறும் பாரதீய ஜனதா மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் பிரதமர் மோடி பேசுகிறார். அதன்பிறகு பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு மதுரை விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் கொச்சி செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விமானநிலையம் முதல் விழா திடல்வரை அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு படை ஐ.ஜி. குப்தா தலைமையிலான குழுவினர் மதுரைவந்து பிரதமர் மோடி பங்கேற்க உள்ள விழா திடல்களை ஆய்வு செய்தனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பிரதமர் நிகழ்ச்சிமுடியும் வரை அந்தப்பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

Tags:

Leave a Reply