எரிசக்தி துறையில் 2022–ம் ஆண்டு இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார்.

பொதுத்துறை நிறுவன மான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்.) தனது பொன்விழா ஆண்டினை கொண்டாடிவருகிறது. இதன் ஒருஅங்கமாக பொன்விழா ஆண்டு நினைவு தூண் திறப்பு விழா சென்னை மணலியில் உள்ள சி.பி.சி.எல். சுத்திக்கரிப்பு ஆலையில் நேற்று நடந்தது.

விழாவுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை இணை மந்திரி (தனிப்பொறுப்பு) தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கி, பொன் விழா ஆண்டு நினைவு தூணை திறந்துவைத்தார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பொன்விழா கொண்டாட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.


மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:–

சி.பி.சி.எல். நிறுவனத்தில், தொடக்கத்தில் 2.5 மில்லியன் மெட்ரிக்டன் ஆக இருந்த உற்பத்தி 11.5 மில்லியன் மெட்ரிக் டன் ஆக அதிகரித்திருப்பது பாராட்டுதற்குரியதாகும். தமிழகத்தில் எரிசக்திதேவையை பூர்த்தி செய்வதிலும், நாட்டின் தேவையை பூர்த்தி செய்து வளர்ச்சிபாதைக்கு முன்னெடுத்து செல்வதிலும் இந்நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவில் 2040–ம் ஆண்டு 600 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலிய பொருட்கள் தேவைப்படும்.

இதற்கான தேவைகளை பூர்த்திசெய்ய சுத்திகரிப்பு ஆலைகளை இப்போதில் இருந்தே திட்டமிட்டு மேம்படுத்த வேண்டும். எரிசக்தி உற்பத்திக்கான ஆற்றல் தமிழகத்தில் இருக்கிறது. மணலி சுற்றுப்புற சூழல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு ஏற்றவாறு சிறப்பாக அமைந்துள்ளது. 2022–ம் ஆண்டு நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களும் எரிசக்திதுறையில் தன்னிறைவு பெறுவதற்காக பிரதமர் மோடி முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார். அது நிச்சயமாக சாத்தியமாகும்.

மத்திய–மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வளர்ச்சியடையும் நாடு என்ற நிலையில் இருந்து, வளர்ந்தநாடு என்ற நிலைக்கு வந்துவிடலாம். வளர்ச்சி திட்டங்களில் தமிழக அரசு ஒரு அடி எடுத்துவைத்தால், மத்திய அரசு இரண்டு அடி எடுத்துவைக்கும். இந்தியன் ஆயில் நிறுவனம், சி.பி.சி.எல். உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் ஒரு குடைக்குள் கொண்டுவந்தால் எரிசக்தி துறையில் அதிகவளர்ச்சியை எட்டமுடியும். குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக பகுதி மக்களிடம் பேசி வருகிறோம். அந்த திட்டத்தை கட்டாயமாக கொண்டுவர வற்புறுத்த மாட்டோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply