விமான எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய வற்றை ஜிஎஸ்டி வரி \வசூல் முறைக்குள் கொண்டுவர வேண்டும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறியிருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்திய ஆற்றல்மாநாட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தர்மேந்திரப்பிரதான், “வரலாற்றுச் சிறப்புமிக்க சரக்கு மற்றும் சேவைவரி முறை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடர்ந்து பெட்ரோலியத்துறை எரிபொருட்களையும் ஜிஎஸ்டியில் சேர்க்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறது.” என்றார்.

தொடர்ந்து, “நிதி அமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது இதனை முன்னெடுத்துப்பேச வேண்டும். குறைந்தபட்சம் முதல் கட்டமாக இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் ஆகிய இரண்டை மட்டுமாவது ஜிஎஸ்டிக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நிதிஅமைச்சர் பெட்ரோலியத்துறை அமைச்சரின் பேச்சைக் கேட்கத் தவறிவிட்டார்.

“பெட்ரோலியப் பொருட்கள் மூலம்  கிடைக்கும் வருவாயை மாநில அரசுகள் அதிகம் சார்ந் திருக்கின்றன. இந்தச்  சிக்கலால் பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கி வைக்கப் பட்டுள்ளன” என்றும் தர்மேந்திரப் பிரதான் குறிப்பிட்டார்.

இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருளை ஜிஎஸ்டியில் சேர்ப்பதால் நிறுவனங்களுக்கு வரிமிச்சமாவதுடன் நாடு முழுக்க சீரான வரி விதிப்பு முறையையும் உருவாக்கமுடியும் என பிரதான் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆற்றல் துறையில் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கை எரிவாயு பயன்பாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக அதிகரிக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த அளவு 6.2 சதவீதமாக உள்ளது. சீரான வரி விதிப்பிற்குள் அதனைக் கொண்டுவந்தால் அரசின் இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் பிரதான் சுட்டிக்காட்டினார்.

Comments are closed.