மாநில காங்கிரஸ் தலைவர்கள் எழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார். விவசாயிகள் நலனுக்கு எந்ததிட்டமும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்த வில்லை என்று பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார். ஐதராபாத்-கர்நாடக பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜ தலைவர் அமித்ஷா, நேற்று கர்நாடகாவின் கலபுர்கி மாநகரில் அளித்த பேட்டி: மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் அனைத்து துறையிலும் தோல்வி கண்டுள்ளது. மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குண்டர் ஆட்சி நடத்திவருகிறது.

தேவையில்லாமல், மத்திய அரசின்மீது பழியை போட்டு மாநில அரசு செய்யவேண்டிய கடமையை தட்டி கழித்து வருகிறது. முதல்வர் சித்தராமையாவின் பேச்சில் துளியும் உண்மைகிடையாது. மாநில காங்கிரஸ் தலைவர்கள் எழுதி கொடுப்பதை மனப்பாடமாக ராகுல்காந்தி மேடைகளில் பேசிவருகிறார். விவசாயிகள் நலனுக்கு எந்த திட்டமும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்த வில்லை.  வடகர்நாடக பகுதி மக்களின் நீண்டல கோரிக்கையாக இருந்து வரும் மகதாயி நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்துவதில் ஏற்பட்டு வரும் தாமதத்திற்கு காங்கிரஸ் தான் முழு காரணமாகும்.

இத்திட்டம் செயல்படுத்தாமல் தடுத்து அந்தபழியை பாஜ மீது சுமத்தி அப்பகுதி மக்களை கட்சிக்கு எதிராக திருப்பி விடும் நூதன யுக்தியை காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். மாநில சட்டப் பேரவைக்கு நடக்கும் தேர்தலில் பாஜ ஆட்சி அமைந்தால், மகதாயி நதி இணைப்பு திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். வட கர்நாடக பகுதி மக்கள் நம்பிக்கையுடன் பாஜவை ஆதரிக்க வேண்டும் என்றார்.

துப்பாக்கி வைத்திருந்ததால் பரபரப்பு அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி கொண்டிருந்தபோது, வெளியில் நின்றிருந்த பாஜ தொண்டர் ஒருவரின் கையில் துப்பாக்கி வைத்திருந்ததை பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.பியிடம் தகவல் கொடுத்தனர். அவர் பதறி போய் உடனடியாக அந்த நபரிடம் சென்று துப்பாக்கியை கேட்டார். அவர் கொடுக்காமல் மறுப்பு தெரிவித்தார். அவர் கையில் இருந்து துப்பாக்கியை பறிப்பதற்குள் பரபரப்பு ஏற்பட்டது.

கட்சி தொண்டர்களும், போலீசாரும் அந்தநபரை இழுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அந்த நபரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து, அவரை கைதுசெய்து விசாரணை நடத்தியபோது, அவர் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள முறைப்படி அனுமதி பெற்றவர் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் சில நிமிடம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave a Reply