‘‘பாகிஸ்தான் நடிகர் நடித்துள்ள திரைப் படத்தை வெளியிட பாதுகாப்பு வழங்கப்படும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கியுள்ள திரைப் படம், ‘ஏ தில் ஹை முஷ்கில்’. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். பாகிஸ்தான் நடிகர் பவாத்கானும் நடித்துள்ளார். பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள், அந் நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி, பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த படங்களை வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் திரையரங்குகளை சூறையாடுவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

இதையடுத்து இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் முகேஷ் பட், ஏ தில் ஹை முஷ்கில் படத்தயாரிப்பில் முக்கிய பங்கெடுத்துள்ள தர்மா புரடெக்்ஷன்ஸ், பின்னணி பாடகர் பாபுல் சுப்ரியோ மற்றும் திரைப்படத்துறை பிரதிநிதிகள், டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியிட அறிவிப்பு வெளியிட்டுள் ளோம். ஆனால், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, அந்தத் திரைப் படத்தைப் பாதுகாப்பாக வெளியிடவும், திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிடம் முகேஷ் பட் வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் முகேஷ் பட் கூறியதாவது:

நாங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சியை வழங்குபவர்கள். நாங்கள் கலைஞர்களுடன் பணியாற்றவே விரும்புகிறோம். அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களா அல்லது சீனா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களா என்று பார்ப்பதில்லை. இந்தியா சுதந்திரநாடு. வலுக்கட்டாயமாக நீங்கள் மக்களைத் தடுக்க முடியாது. தீபாவளியை சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படங்களுடன் கொண்டாட விரும்புகிறோம்.

மும்பை உட்பட பல மாநிலங் களில் ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படம் வெளியாக உள்ளது. அதைத் தடுக்க முயற்சிகள் நடக் கின்றன. எனவே, சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறோம். எனவே, மாநில முதல்வர் திரைப்படத்துக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உத்தரவிடவேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினோம்.

அதன்படி, ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படத்துக்குத் தகுந்தபாதுகாப்பு வழங்க மாநில முதல்வர்களுடன் பேசுவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். படத்தை பாதுகாப்பாக வெளியிடுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர்கூறினார். அவர் உறுதி அளித்த பிறகு தான் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். இப்போதுதான் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நவநிர்மான்சேனா என்ன மிரட்டல் விடுத்தாலும் இனி கவலை இல்லை. அரசு எங்கள்பக்கம் இருக்கிறது. திரையரங்கு உரிமையாளர்கள் பயப்பட வேண்டாம். இவ்வாறு முகேஷ் பட் கூறினார்.

ஏற்கெனவே ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு கோரி மும்பை போலீஸ் ஆணை யரிடம் முகேஷ் பட் மனு கொடுத்துள்ளார்.

Leave a Reply