சிரியா மற்றும் இராக்கின் பெரும்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, பல்வேறு நாடுகளில் தீவிர வாதத்தை பரப்ப முயன்று வருகிறது. இதற்காக சமூக வலை தளங்கள் மூலம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, தனது அமைப்பில் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்தும் இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து சிரியா செல்ல முயன்ற மாணவரை போலீஸார் கண்காணித்து கைது செய்தனர். மேலும் குடியரசு தின பாதுகாப்புக் காக மேற்கொள்ளப்பட்ட முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கடந்த வாரம் மட்டும் ஐஎஸ் தீவிர வாத அமைப்புடன் தொடர்பு கொண்ட 14 இளைஞர்களை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

இதே போல் கர்நாடகா, தெலங் கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங் களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் ஐஎஸ் ஆதரவாளர்கள் பலர் சிக்கினர். விசாரணையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தங்களுடன் ஒத்துப் போகும்படியாக அவர்கள் செயல்பட்டதும் இதற்காக ஜனூத்-உல்-கலிபா-இ-ஹிந்த் என்ற பெயரில் தீவிரவாத அமைப்பை அவர்கள் தொடங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதன் காரணமாக ஐஎஸ்ஸுடன் தொடர்பில் உள்ள இளைஞர்களை கண்காணிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தோராயமாக 150 இளைஞர்கள் உளவுத் துறையின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப் படுகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நேற்று ஒருநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம், ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி னர். அதற்கு அவர், ‘‘ஐஎஸ் தீவிர வாத அமைப்பின் எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்கும் திறமை நமது பாதுகாப்பு படைகளுக்கு இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் யாரும் அச்சம்கொள்ள வேண்டாம்’’ என்றார்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல் பட்டு வரும் சில சமூகவிரோத சக்திகள் அதன் சித்தாந்தங்கள், செய்திகள் ஆகியவற்றை இந்தி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிட்டு ஆள்சேர்க்கும் படலத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply