வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச பஸ்பயணம் கிடைக்கும் வகையில், ஒரு கோடி குடும்பங்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பாஜ ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கிறார். மாநிலத்தில் 58 ஆயிரம் கிராமங்களுக்கு பஸ்போக்குவரத்து வசதி உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மாநிலத்தில் உள்ள, 1.07 லட்சம் கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்ய, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ஏழை, எளியமக்களுக்கு பஸ் போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, ஒரு கோடி குடும்பங்களுக்கு, இலவச பஸ்பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, இந்தக் குடும்பங்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இத்துடன், இந்த குடும்பங்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்துகாப்பீடும் வழங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரையை, மாநில போக்குவரத்து துறை, அரசுக்கு அனுப்பியுள்ளது. விரைவில் இது நடை முறைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த இலவச பயணதிட்டத்தால், போக்குவரத்து துறைக்கு, ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய் செலவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply