காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நடத்திய மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்ட விளையாட்டு முடிந்து விட்டது!

இந்த போராட்டம் அவசியமா என்றால் பொது மக்கள் தொடர்புடைய முக்கிய பிரச்சினை ஒன்றில் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்று காட்ட வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது!

காவிரி மேலாண்மை வாரியப் பிரச்சினையில் தங்களது அக்கறையை காட்ட விரும்புவது இந்த கட்சிகளின் உண்மையான நோக்கம் என்றால்
மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுத்து இருக்கலாம்!

விவசாய சங்கங்களின் சார்பிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்க இந்த கட்சிகளே துணை புரிந்து இருக்கலாம்!

அப்படி செய்திருந்தால் உச்ச நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் தமிழகத்தின் அக்கறையை உணர்த்தி இருக்கலாம்.

அத்துடன் தீர்ப்பில் கூறப்பட்ட தீர்வுக்கான உறுதியான கால அட்டவணையை பெற்றுத் தர வேண்டும் என்றுஉச்ச நீதிமன்றத்தை கோரி இருக்க முடியும்.

இன்னும் ஒரு படி மேலே போய் சில வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு கண்காணிப்பது போல காவிரி நதி நீர் பங்கீட்டு வழி முறையை ஏற்படுத்துவதையும் செய்ய வேண்டும் என்று கோரி இருக்கலாம்.

போராட்ட வழி முறைகள் போல நீதிமன்ற அணுகுமுறை மக்களைச் சென்று அடையுமா?
அரசியல் ஆதாயம் கிடைக்குமா? எல்லா செய்திகளும் எல்லா மக்களையும் சென்றடையும் காலம் இது. அதனால் நீதிமன்ற நடவடிக்கைகளும் மக்களை சென்றடையும்!

ஆனால் இன்று நடைபெற்றது போல ஒரு திருவிழா கோலத்திற்கு வாய்ப்பு இல்லை!

ஆனால் ஓரளவு உருப்படியான பலன் கிடைக்கும்.

பயனை விட பரபரப்பு தான் அரசியல் கட்சிகளுக்கு அவசியமாக இருக்கிறது! மக்களை தொல்லைக்கு உள்ளாக்கி தான் மக்கள் மீதான அக்கறையை காட்டுவது என்ற போராட்ட அரசியல் வெற்றிகரமானதாக தலைவர்களுக்கு தோன்றுகிறது!
அதையும் தாண்டி தொண்டர்களை உற்சாகப் படுத்த இம்மாதிரியான விளையாட்டுகள் அவசியமாகிறது!

அந்த வகையில் இன்று ஒரு விளையாட்டு முடிந்தது!

நன்றி வசந்த பெருமாள்

Leave a Reply