மகாராஷ்ட்ரா மாநிலம் நவிமும்பைக்கு அருகில் உள்ள உரான் என்ற இடத்தில் பொதுத் துறை நிறுவனத்துக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி ஆலை இயங்கிவருகிறது. அங்கு வழக்கம்போல் இன்று காலை முதல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.காலை 7 மணியளவில் ஆலையில் உள்ள கச்சா எண்ணெய் வடிகால் பகுதியில் திடீரென தீ பற்றியுள்ளது.

இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள், தீ மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஊழியர்கள், ஆலையிலிருந்த அனைத்து கச்சாஎண்ணெய் குழாய்களையும் மூடியுள்ளனர். தொழிலாளர்களின் துரித நடவடிக்கையால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டுமணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 5ந்து ஓ.என்.ஜி.சி தொழிலாளர்கள் மற்றும் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவருக்குப் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

தீவிபத்து தொடர்பாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `இன்று காலை உரான் ஆலையின் வடிகால் பகுதியில் ஏற்பட்ட தீ, அடுத்த இரண்டுமணி நேரங்களில் அணைக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி-யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தீ விபத்து முறையாகக் கையாளபட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி-யில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஆலையைச் சுற்றி ஒருகிலோமீட்டர் தூரத்துக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொழிலாளர்களின் வேலையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.