17வது மக்களவையின் தலைவராக பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.பி. ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வானார்.

அவைத்தலைவராக ஓம் பிர்லா தேர்வு செய்வது குறித்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது குரலெடுப்பின் மூலம் வாக்கெடுப்பு நடத்தபட்டு, ஒரு மனதாக ஓம் பிர்லா அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த மக்களவைக்கு தலைவராக ஓம்பிர்லாவை முன்மொழிகிறேன் என்று பிரதமர் கூற, இந்த தீர்மானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வழிமொழிந்தார்.

ஓர் பிர்லா அவைத் தலைவராக தேர்வானதை தொடர்ந்து அவரை பிரதமர் அழைத்துச்சென்று அவைத்தலைவர் நாற்காலியில் அமரவைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

பிறகு மக்களவை கூட்டத்தில் ஓர் பிர்லாவை பாராட்டி மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஓர் பிர்லா அவர்கள் ஒருமனதாக மக்களவையின் அவைத் தலைவராக தேர்வு செய்யப் பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயமாக அமைந்துள்ளது. ராஜஸ்தான் மாநில மக்களுக்கு சேவையாற்றிய ஓர் பிர்லாவை பெரும்பாலான மக்களவை உறுப்பினர்களுக்கு நன்குதெரியும்.

ஓர் பிர்லாவின் பணிச் சிறப்பு குறித்து நீண்ட காலமாக எனக்குத் தெரியும். பல ஆண்டு காலமாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் ஓம் பிர்லா, மாணவர் பருவத்தில் இருந்தே சேவைசெய்யும் பணியில் ஈடுபட்டு, எந்த தொய்வும் இன்றி தொடர்ந்து சேவையாற்றி வருகிறார் என்று மோடி கூறினார்.

பதினேழாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி திங்கள் கிழமையும், செவ்வாய்க் கிழமையும் நடைபெற்றது.

மக்களவை இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட வீரேந்திர குமார், புதிய எம்.பி.க்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிலையில், மக்களவைத் தலைவராக ராஜஸ்தானின் கோட்டா-புந்தி மக்களவைத் தொகுதி எம்.பி.யான ஓம் பிர்லா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக 3 முறை இருந்துள்ள ஓம் பிர்லா, கோட்டா-புந்தி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

முன்னதாக், ஓம் பிர்லாவுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மக்களவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ்  கட்சியும் ஆதரவு தெரிவித்துவிட்டதால், அவர் ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Comments are closed.