“காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசை குறைசொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது குறித்து, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதிநீர் பிரச்னையை பொறுத்தமட்டில் இது வரை ஆட்சி செய்தவர்களும்,

ஆட்சியில் பங்கெடுத்து கொண்டவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் தங்கள்காலத்தில் இதை தீர்ப்பதற்கு எவ்வித தீவிரமுயற்சியும் எடுக்கவில்லை. இன்று இப்பிரச்னையில் மத்திய அரசை குறை சொல்வதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், தமிழர்களின் உரிமையை காப்பதில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

கர்நாடக அரசிடம் இருந்து உச்சநீதிமன்றம் வாயிலாக ஓரளவு தண்ணீர் கிடைக்கிறது என்றால், அதன் பின்புலத்தில் மத்தியஅரசு உள்ளது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று சொன்னபோது, போதிய அளவு நீர் இருக்கிறது என்று மத்திய நீர்வள அமைச்சகம் அறிக்கை தாக்கல்செய்தது. அதனால், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. அதையும் மீறி கர்நாடகாவில் போராட்டம் வெடித்த போதும், தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலையிட்டு துணை ராணுவப்படையை அனுப்பியது மட்டுமல்லாமல், கர்நாடக அரசிடம் பேசியபின்புதான் அங்கு நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

அங்கு ஆட்சி செய்வது காங்கிரஸ் அரசாக இருந்தாலும், சட்ட ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும் அதை கட்டுக்குள்வைக்க காங்கிரஸ் அரசு தவறியது உண்மை. ஆனால், வேண்டுமென்றே பாஜவையும், மத்திய அரசையும் குறை கூறுவது ஏற்புடையதல்ல. பிரதமர் நரேந்திர மோடி எந்த அரசியல் காரணத்தாலும் சாமானிய மக்கள் எவ்வித பாதிப்பும் அடையக் கூடாது என்ற தனது கருத்தை வலிமையாக பதிவு செய்திருக்கிறார். அதனால் தமிழர்கள் தாக்கப் பட்டதை கண்டித்தும், தமிழர்கள் நலன் காக்கப்படவேண்டும் என்பதை உணர்த்தியும் இன்று நடைபெறும் முழு அடைப்பிற்கு தமிழக பாஜக முழு ஆதரவு அளிக்கும். அதேநேரத்தில் இந்த முழு அடைப்பின் போது மறியல் மற்றும் வன்முறை போராட்டங்கள் நடத்துவது எங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடியது அல்ல என்பதையும் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply