இன்று காலை, ஒரு தொலைக்காட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ஒருவர், குஜராத்தில் நடந்த கலவரங்கள் குறித்தும் நீதிமன்றங்களின் தீர்ப்பு மற்றும் அம்மாநில அரசு குறித்தும் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க ,கேட்க நேர்ந்தது. நீதிமன்றங்கள் இந்த வழக்கில் தெளிவான தீர்ப்புகளை சொல்லி, உண்மையான குற்றவாளிகளை தண்டித்துள்ளது என்பதையும், அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகளை விடுத்துள்ளது என்பதும் நாம் அறிந்ததே. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இது குறித்து பேசுவதற்கு அருகதை உள்ளதா?

1982ம் வருடம் ஏப்ரல் 30ம் தேதி கல்கத்தா நகரின் மையப்பகுதியில், டாக்ஸியில் சென்று கொண்டிருந்த,கம்யூனிஸ்ட் கட்சியின் அடக்கு முறைகளுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்த, 'ஆனந்த மார்க்கம்' அமைப்பை சார்ந்த 16 துறவிகள் மற்றும் ஒரு செவிலியரை பட்டப்பகலில், பல ஆயிரம் பேர்களுக்கு மத்தியில் உயிரோடு எரித்து கொன்றது ஒரு கும்பல். அந்த வழக்கில் 2011 ம் வருடம் வரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆளும் அரசுக்கு பயந்து கொண்டு, அந்த சம்பவத்தில் பட்டப்பகலில் ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இருந்த போதும் ஒரு சாட்சியும் முன்வரவில்லை என்பதும் எந்த நபரும் விசாரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் தான் இந்த படு பாதக செயலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பினர் குற்றம் சாட்டினர். அன்றைய கம்யூனிஸ்ட் அரசு ஒரு ஆணையத்தை அமைத்ததாக அறிவிப்பு செய்ததோடு வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அது குறித்த மனித உரிமை ஆணையத்தின் விசாரணைகளுக்கும் ஒத்துழைக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய முதல்வர் ஜோதி பாசு அவர்கள், "என்ன செய்ய முடியும், இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்" என்று சொன்னது இன்றும் சிகப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மாறி மம்தா பானர்ஜீ தலைமையிலான அரசு வந்த பிறகு பல்வேறு படுகொலை,இன அழிப்பு சம்பவங்கள் குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. நீதியரசர் அமித்தாப் லாலா அவர்களின் தலைமையில் 2013ம் ஆண்டு விசாரணை ஆணையத்தை அமைத்தது மேற்கு வங்காள அரசு. கம்யூனிஸ்ட் ஆட்சியில் 2001 முதல் 2011வரை அமைச்சராக இருந்த காந்தி கங்குலி அவர்களை இந்த ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என்று, கல்கத்தா உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில், 34 ஆண்டுகளுக்கு முன் நடந்த மிக பெரிய கோர சம்பவத்திற்கான காரணங்கள் வெளிச்சத்திற்கு வருவதோடு, குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவர் என எதிர்பார்ப்போம்.

நாராயணன் திருப்பதி.

Leave a Reply