பாஜக ஈரோடு தெற்குமாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில்கொண்டு ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார். இந்ததிட்டத்திற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

செல்லாத ரூபாய் நோட்டுகளால் கோடிக்கணக்கில் கருப்புபணத்தை வைத்திருப்பவர்களுக்கு மரண அடியாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்கு திட்டத்தினால் கருப்புபணம் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கள்ளநோட்டு ஒழிக்க சிறந்த நடவடிக்கை என்று பொருளாதார வல்லுனர்கள் பாராட்டி உள்ளனர். காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்து குறைகளை கூறிவருகிறது. தமிழ்நாட்டில் 4 வழிச்சாலை அமைக்க பல்வேறு திட்டங்கள் உள்ளன.

குறிப்பாக பொள்ளாச்சி- கோவை, பழனிரோட்டில் 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிறந்ததிட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும்.

காவிரி பிரச்சனையில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சிபுரியும் காங்கிரஸ் அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி தண்ணீர்திறக்க மறுக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாஜக. ஆட்சியில் இருந்தபோது தண்ணீர் திறக்க மறுத்தபோது தமிழக பா.ஜ.க. சார்பில் கண்டனத்தை தெரிவித்தோம்.

ஆனால் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி மவுனம் சாதித்துவருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழுமையாக எடுத்துவருகிறது. எனவே தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் நிரந்தரமாககிடைக்கும் இவ்வாறு மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply