கர்நாடகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பேன் என்று பா.ஜ.க வேட்பாளரான மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லி மேல்சபை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் நேற்று வேட்புமனு தாக்கல்செய்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் கன்னடமொழியை கற்க முயற்சிசெய்வேன். ஏற்கனவே இந்தமுயற்சியை தொடங்கிவிட்டேன். மாநிலத்தின் நிலம், நீர், மொழி, எல்லை பிரச்சினைகளில் கர்நாடகத்தின் நலனுக்காக குரல்கொடுப்பேன். கர்நாடக மக்களுக்கு சேவையாற்றுவேன். பிரதமர் மோடி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் என்னை கர்நாடகத்திற்கு அனுப்பியுள்ளார்.

கர்நாடக மக்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்புகிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன் கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சி செய்தபோது எடியூரப்பா ஏராளமான திட்டங்களை அமல் படுத்தினார். விவசாயிகளுக்கு தனியாக விவசாய பட்ஜெட்டை அவர் தாக்கல்செய்தார். பள்ளி குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், பாக்ய லட்சுமி திட்டம் உள்பட பல்வேறு மக்கள் நல திட்டங்களை எடியூரப்பா அமல்படுத்தினார்.

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு எங்கள் கட்சியின் மூத்த தலைவர். அவர் கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்சபைக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கர்நாடக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். அவர் கர்நாடகத்திற்கு எந்தசேவையும் ஆற்றவில்லை என்று குறை கூறி டிக்கெட் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. வேறுசில காரணங்களால் கட்சி என்னை கர்நாடகத்தில் போட்டியிட அனுமதி வழங்கியுள்ளது இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published.