காவிரி விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என இல.கணேசன் சென்னையில் கூறினார்.
 
பாரதீய ஜனதா கட்சியின் தேசியசெயற்குழு உறுப்பினரான இல.கணேசன், மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மேல்சபை உறுப்பினராக (எம்.பி.,) தேர்வுசெய்யப்பட உள்ளார். இதற்காக மத்திய பிரதேச மாநில தலைநகர் போபால் சென்று வேட்புமனுவை தாக்கல்செய்தார். பின்னர் சென்னை திரும்பிய இல.கணேசன், தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக. தலைமை அலுவலகத்துக்கு நேற்றுகாலை வருகைதந்தார்.
 
அவரை, மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மயிலாப்பூர் தில்லைவிநாயகர் கோவில்சார்பில் பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் உள்ள பாரதமாதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
காவிரிவிவகாரத்தில் கர்நாடக அரசு பல காலம் செய்த தவறுகளுக்கு நியாயம்கற்பிப்பது இனி எடுபடாது, சுப்ரீம் கோர்ட்டு ஆணையை செயல் படுத்தி தான் ஆகவேண்டும். பிரதமரும் இந்த விஷயத்தில் தெளிவான முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவும் சுப்ரீம்கோர்ட்டு ஆணைக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். காவிரிவிவகாரம் தொடர்பாக பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவே கவுடா உண்ணாவிரதம் இருப்பது ஒரு அரசியல்நாடகம். அவர் ஒரு அரசியல்கட்சியின் தலைவராக இருப்பதுடன், பிரதமரையும் தாண்டி பல்வேறு குணங்கள் அவருக்கு உள்ளது.
 
அந்தமாநிலத்தில் எதிர்க்கட்சியாக அவர் இருப்பதால், ஓட்டு வங்கியைபெறுவதற்கு இதுபோன்று ஏதாவது ஒன்று செய்தாக வேண்டும். அவருடைய உண்ணா விரதத்தால் மத்திய அரசுக்கோ அல்லது நீதிமன்ற உத்தரவுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. காவிரிமேலாண்மை வாரியத்தில் யார் யாரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளிடம் கருத்துகேட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். முறைப்படி பிரதமர் மோடி விரைவில்அறிவிப்பார்.
 
 
உள்ளாட்சி தேர்தலில் எந்தகட்சி உடனும் கூட்டணி இல்லை. 100 சதவீதம் வேட்பாளர்களை நியமித்து வெற்றிபெறுவோம். ஒருசில குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வந்தாலும் அவர்களும் தாமரைசின்னத்தில் போட்டியிடுவார்கள்.
 
அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தனித்து போட்டி யிடுவதை வரவேற்கிறேன். அப்போதுதான் கட்சிகளின் உண்மை பலம் என்ன என்று தெரியவரும். உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை மக்களிடம் கூறி ஓட்டுகளை கேட்போம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply