2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள். பெங்களூரு மாநகரத்தில் அடைமழை. மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அமர்ந்திருந்த மாநிலத்தலைவர் எடியூரப்பாவும் மற்றும் அனைத்து தலைவர்களும் கவலை தோய்ந்த முகத்துடன் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தனர். தேசியத் தலைவர் அமித் ஷா அன்று காலையில் பெங்களூரு வர இருப்பதும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதும் அவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பினும், தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்த அடைமழையால், அமித் ஷாவின் விமானப்பயணம் ரத்தாகி விடுமோ என்ற கவலை அவர்கள் முகத்தில் அவ்வப்போது தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

அமித் ஷா பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு , அதுவரை எந்தவொரு தேசியத்தலைவரும் செய்யாதவகையில், மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்றும், பெரிய மாநிலங்களாக இருந்தால் அவற்றில் மூன்று நாட்கள் தங்கியிருந்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களோடு உரையாடுவது என்றும், சிறிய மாநிலங்களில் இரண்டு நாட்களும், யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு நாளும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்து அதன்படி ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

 

அதன் ஒரு பகுதியாக 12.8.2017 முதல் 14.8.2017 வரை கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 12.8.2017 அன்று காலை, அடைமழையிலும் விமானப் பயணம் மேற்கொண்டு, பெங்களூரு மாநகரம் வந்திறங்கிய அவருக்கு அளித்த மாபெரும் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, நேராக மல்லேஸ்வரம் வந்த அமித் ஷா, கர்நாடக மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த அழகிய நூலகம் மற்றும் டிஜிட்டல் நூலகத்தை தொடங்கி வைத்தார். டிஜிட்டல் நூலகத்தை தொடங்கிவைத்த அவர், கணினி முன் அமர்ந்து நூல்களை புரட்ட ஆரம்பித்தவர் பல மணி நேரம் அந்நூல்களிலேயே நேரத்தை செலவிட தொடங்கினார்.

பசவன்னாவின் வாச்சனாக்கள் அவரது உள்ளத்தை கொள்ளை கொள்ள தொடங்கியிருந்தன. நூலகத் திறப்புக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரமாக நூலகத்தை விட்டு வெளியே வராமல் அமித் ஷா அங்கேயே அமர்ந்திருந்தது அங்கிருந்த அனைத்து தலைவர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய அதே சமயம், அவரது மற்ற நிகழ்ச்சிகள் கால தாமதத்தால் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் ஏற்படுத்தியது.

இரண்டு மணி நேரம் கழித்து நூலகத்தை விட்டு வெளியே வந்த அமித் ஷா, கர்நாடக மாநிலத்தின் வரலாறு, புவியியல் பரப்பு, இலக்கியம், கலாச்சாரம் குறித்து தான் தொடர்ந்து படித்தும் கேட்டும் தெரிந்துகொள்ளப்போகிறேன் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இந்த புரிந்துணர்வு கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. அரசை உருவாக்கும் தனது அடுத்த இலக்குக்கு உதவும் என்று நம்பினார்.

கர்நாடக மாநிலத்தின் அனைத்து தகவல்களையும் தனது விரல் நுனியில் சேகரித்து வைத்திருந்த அமித் ஷாவுக்கு, மாநில தேர்தலை எதிர்கொள்வதில் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படவில்லை. மாநிலத்தின் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒன்று சேர்த்து, கட்சியின் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக்கி ஒரே நேர்கோட்டில் பயணப்படுத்தியதில் தான் ஒரு சாணக்கியன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஒருங்கிணைக்கப்பட்ட யுத்தி

கர்நாடகா மாநிலத்தைப் பொறுத்த வரையில் வாக்காளர்கள் தங்களது ஜாதி மற்றும் தாங்கள் தங்கியிருக்கும் பிராந்தியத்தைப் பொறுத்தே வாக்களிப்பார்கள் என்பது காலந்தொட்டு அறியப்படுகின்ற ஒன்று. உதாரணமாக, மாநிலத்தின் மையப்பகுதியில் லிங்காயத்து இனத்தவரும், தென் பகுதியில் ஒக்கலிகா இனத்தினரும், தலித் இனத்தினர் ஆந்திர – கர்நாடகா பகுதியிலும் வாழ்கின்றனர்.

 

எனவே, கட்சி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பெரும்பான்மை வாக்குகளை பெறுபவராகவும், அதே சமயம் அந்தந்த பிராந்தியத்தில் நல்ல பெயரை சம்பாதித்ததவராகவும் இருத்தல் அவசியம். மேலும், பரப்புரையின்போது அவர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உடனுக்குடன் பதில் தரும் சக்தி வாய்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

இவ்வாறு, வேட்பாளர் தேர்வு தொடங்கி, பரப்புரையின்போது எழும் சவால்களை மேற்கொள்வது மற்றும் வாக்குப்பதிவு நாள் அன்று வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினார்களா என்பது வரை அனைத்து யுக்திகளையும் கையாண்டார் அமீத் ஷா.

கட்சியின் நிர்வாகிகள் மாநிலத்தின் நாலாபுறமும் சென்று வாக்காளர்களை தினந்தோறும் சந்தித்து வந்தனர்.

வாக்காளர்களுக்கு கட்சி குறித்து தகவல் தருவதும், கட்சியின் தேர்தல் வாக்குறுதியை விளக்குவதும், மத்திய அரசின் சாதனைகளைப் பற்றி கூறுவதும், மத்தியிலுள்ள மோதி அரசு போல மாநிலத்திலும் ஆட்சி அமைந்தால் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் தொடர்ந்து எடுத்துக் கூறி வருவது தான் இவர்களது பணி.

இந்தப் பணியை கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக பல லட்சம் பா.ஜ.க. தொண்டர்கள் மேற்கொண்டது தான் கட்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது என்றால் மிகையாகாது.

கதாநாயகன் நரேந்திர மோதி

இத்தேர்தல் முடிவு வட இந்தியாவின் கட்சியாக பார்க்கப்பட்ட ஒரு கட்சியை தென்னிந்தியாவில் காலூன்றச் செய்தது என்றால், அதன் ஒரே கதாநாயகன் பிரதமர் நரேந்திர மோதி என்றால் அது மிகையாகாது. நாள் ஒன்றுக்கு மூன்று வீதம் மொத்தம் 21 பொதுக்கூட்டங்கள். கட்சி எங்கே தொய்வாக உள்ளதாக தகவல் வந்த அதே மைசூர் மாகாணத்தில் தனது முதல் பரப்புரையை மேற்கொண்டார்.

 

கலந்துகொண்ட ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம். ஹிந்தி மொழியில் பேசியதை கன்னட மொழியில் மொழி பெயர்ப்பு செய்ததை நிறுத்தச்சொன்ன அவர், ஒரு கட்டத்தில் நேரடியாக ஹிந்தி மொழியிலேயே பேசி, உணர்வுகளை பகிர்ந்துகொள்ள மொழி அவசியம் இல்லை என்று உணர செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக தான் நடத்திவரும் ஊழலற்ற மத்தியஆட்சியைப் போல, மாநிலத்திலும் ஒரு ஆட்சி வேண்டுமென்றால் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் முறையற்ற அரசியல் போக்கினை சாடிய அவர், கடந்த ஆட்சிக்காலக்கட்டங்களில் அவர்கள் செய்த ஊழலையும் மக்கள்முன் வைத்தார். முதலில் 15 பொதுக்கூட்டங்களில் பேசுவதாக திட்டமிட்டிருந்த அவரது பயணத்திட்டம், பிறகு 21ஆக அதிகரித்து அமைக்கும் வகையில், கர்நாடக மக்களின் இதயங்களில் குடிகொண்டார் மோதி.

நேர்த்தியான திட்டமிடல், திட்டத்தை தொய்வில்லாமல் செயல்படுத்துதல், அனைத்து தலைவர்களுக்கும் பொறுப்பினை பகிர்ந்து தருதல், செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தல் என்று ஒரு மாபெரும் ஆளுமையாக செயல்பட்டார் அமித் ஷா. 34 நாட்களில், 57,135 கி.மீ. சாலைவழி சுற்றுப்பயணம், 62 பொதுக்கூட்டங்கள்; 25 ஊர்வலங்கள் என்று சிறிதும் ஓய்வின்றி உழைத்தார்.

 

முன்னாள் முதல்வர் வீரேந்திர பாட்டிலை அவமதித்த காங்கிரஸ் கட்சியின் போக்கினால், 1990ஆம் ஆண்டு முதல் லிங்காயத்து வகுப்பினர் பா.ஜ.க.வின் ஆதரவாளராக மாறினார்கள். மாநிலம் முழுமைக்கும் 17 சதவிகிதம் உள்ள இந்த வகுப்பினரை கவருவதற்காக அவர்களிடையே வேற்றுமை உணர்வை உருவாக்கும்பொருட்டு, அவ்வகுப்பினரை சிறுபான்மை வகுப்பினர் என்று அறிவித்தார் சித்தராமையா. ஆனால், அவரது கணிப்பு பொய்யாகிவிட்டது.

அரசியல் ஆதாயத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து அவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளாத லிங்காயத்து வகுப்பினர் ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர். அதன் காரணமாக, சித்திராதுர்கா, தவணகெரே உள்ளிட்ட இவ்வகுப்பினர் அதிகமாக வாழும் மத்திய கர்நாடகா பகுதிகளில் 42 சதவிகிதம் மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்துள்ளனர்.

லிங்காயத்து மட்டுமல்லாமல், தலித்துகள் மற்றும் இஸ்லாமிய மக்களும் பா.ஜ.க.வுக்கு வாக்களித்திருப்பது அனைத்து மட்டத்திலும் கட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடற்கரை கர்நாடகா என்று அழைக்கப்படும் மங்களூரு, தக்ஷிண கன்னடா போன்ற மாவட்டங்களில் 51% மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தை ஒட்டியுள்ள பெலகவி, பீதர் போன்ற மாவட்டங்களில் மிகவும் அதிக அளவாக 44% மக்கள் பா.ஜ.க.வுக்கு ஓட்டளித்த காரணத்தால் இந்த இரண்டு பிராந்தியங்களில் இருந்து மிகவும் அதிக அளவுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 61% லிங்காயத்து ஓட்டுக்கள், 19% ஒக்கலிகா ஓட்டுக்கள், 40% தலித் மக்களின் ஓட்டுக்கள், 27% குருபா இன மக்களின் ஓட்டுக்கள், 44% பழங்குடியின மக்களின் ஓட்டுக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் 52% ஓட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து, பா.ஜ.க.வுக்கு 36.2% வாக்குகளை அளித்துள்ளனர். அதன் காரணமாக 104 தொகுதிகளில் வென்று, முதல் இடத்தைப் பெற்றுள்ளது பாரதீய ஜனதா கட்சி.

Leave a Reply