சுவிட்சர்லாந்தில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்கள் 2019 செப்டம்பர் மாதம் முதல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கறுப்புப்பணத்தை அவர்களது  வங்கிக் கணக்குகளில் பராமரித்து வருகின்றனர். இவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கவேண்டும் என அனைத்து நாடுகளும் சுவிட்சர்லாந்து அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. 

இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சுவிஸ் அரசு, 38 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பினர்களை கொண்ட  'AEOI' எனப்படும் 'தகவல் பரிமாற்ற' நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இதனால், அடுத்தாண்டு முதல், பல்வேறுநாடுகளுக்கு கறுப்புப்பணம் குறித்த தகவல்களை சுவிஸ் அரசு வழங்கவுள்ளது. இந்நிலையில், கறுப்புப்பணம் பதுக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை வெளியிடவேண்டும் என மத்திய அரசு முன்வைத்திருந்த நீண்ட நாள் கோரிக்கையை சுவிஸ் அரசு தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

 இதன்காரணமாக, 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், மத்திய அரசுக்கு கறுப்புப் பணம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி,  வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்படுள்ள இந்தியர்களின் கறுப்புப்பணம் முழுவதுமாக மீட்கப்படும் என உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply