செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை விமர்சிப்போரை, 'கறுப்புப் பணத்தை ஆராதிக்கும், அரசியல் பூசாரிகள்' என, பிரதமர், நரேந்திர மோடி, கடுமையாக சாடியுள்ளார்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன; இதில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது: கறுப்புப்பணம், கள்ள நோட்டுகளுக்கு எதிராக, மத்திய அரசு,

பெரியளவிலான போரை துவங்கிஉள்ளது. கறுப்புப் பணத்தால், அரசியல், சமூகம், நிர்வாகம் மிகமோசமாக சீர்கெட்டுள்ளன.

இதை ஒழிக்கும் நோக்கில், மத்திய அரசு, செல்லாத ரூபாய் நோட்டுதிட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு, அமோக ஆதரவு அளித்த, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு, நன்றி. மத்திய அரசின் நடவடிக்கைகளை, கறுப்புப்பணத்தை ஆராதிக்கும் சில அரசியல் பூசாரிகள், மக்கள் விரோத நடவடிக்கை எனக்கூறுவது, துரதிருஷ்டவசமானது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, வெளிநாடுவாழ் இந்தியர்கள் சிறப்பான சேவையாற்றி உள்ளனர். இந்தியாவில், அவர்களின் முதலீடு, 4.7 லட்சம்கோடி ரூபாய். எப்.டி.ஐ., என்பதற்கு இரண்டு அர்த்தங்கள். ஒன்று, அன்னியநேரடி முதலீடு; மற்றொன்று, முதலில் இந்தியாவை முன்னேற்று. 21ம் நுாற்றாண்டு, இந்தியாவுக்கே சொந்தம் என, முழு நம்பிக்கையுடன் என்னால் சொல்ல முடியும்.
 

வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை தேடும் தொழிலாளர்களுக்காக, அவர்களின் திறன் உயர்த்தும் திட்டங்களை அரசு அமல்படுத்தும்.

வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலனை மேம்படுத்த, மத்திய அரசு, உச்ச பட்ச முன்னுரிமை அளிக்கும். வெளிநாடுவாழ் இந்தியர்களின் பாதுகாப்பு விஷயத்தில், அதிககவனம் செலுத்துவோம். இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply