கறுப்புப் பணம் தொடர்பான தகவல்களை பரிமாறிகொள்ளும் ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சை துவங்க தயாராக உள்ளதாக, சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. இதன்மூலம் சுவிட்சர்லாந்தில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப் பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கும் மத்தியரசின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் உட்பட, ஐந்துநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு, சுவிட்சர்லாந்து சென்றடைந்தார். நேற்று பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதன்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப் பின் போது, பிரதமர் கூறியதாவது:கறுப்புப்பண புழக்கத்தை ஒடுக்குவது மிக முக்கியமான பிரச்னை. அந்தவகையில், வரி ஏய்ப்பு என்பது இரண்டு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது. வரி ஏய்ப்பாளர்கள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்வது குறித்து விவாதித்தோம். இதற்கான ஒப்பந்தம் செய்வது தொடர்பான பேச்சை உடனடியாக துவங்க உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

''வரி ஏய்ப்பு மற்றும் மோசடியை தடுப்பதில், இருநாடுகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். கறுப்புப்பணம் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள ஒப்பந்தம் தேவைப்படுகிறது. இது குறித்து, இந்திய அரசுடன் பேச்சு நடத்த முடிவுசெய்துள்ளோம்,'' என, சுவிட்சர்லாந்து அதிபர் ஜோஹான் அம்மான் கூறினார்.

என்.எஸ்.ஜி., எனப்படும், அணு எரிசக்தி வினியோகக் குழுவில்இந்தியா இடம்பெறுவதற்கு ஆதரவளிப்பதாக, சுவிட்சர்லாந்து அதிபர் தெரிவித்தார்.அணு எரிசக்திதுறையில் முன்னேற்றம் காண்பதற்காக, 48 நாடுகள் உள்ள இந்த அமைப்பில் இணைவதற்கு, நீண்டகாலமாக இந்தியா முயற்சித்து வருகிறது.

இதற்காக, முறையான விண்ணப் பத்தை இந்தியா அளித்துள்ளது. வரும், 8 மற்றும், 9ம் தேதிகளில், வியன்னாவில் நடக்கும் கூட்டத்திலும், வரும், 24ல், சியோலில் நடக்கும்கூட்டத்திலும், இந்த குழுவில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில், சுவிஸ் அதிபர் அம்மானுடன் நடந்த சந்திப்பின்போது இந்த அமைப்பில் உறுப்பினராக மோடி ஆதரவு கோரினார். அதையேற்று, ஆதரவு அளிப்பதாக சுவிஸ் அதிபர் அறிவித்தார்.

Leave a Reply