சுதந்திரம் பெற்றதற்குபின் நடந்த முதல்தேர்தலில் நாட்டில் காங்கிரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி எதுவும் இல்லை. கம்யூனிஸ்டுகள்தான் ஆங்காங்கே தென்பட்டனர். இதனால் முதல் சிலதேர்தல்களில் மத்தியில் மட்டுமின்றி நாடுமுழுமைக்கும் உள்ள அனைத்து மாநிலங்களும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தில் தான் இருந்து வந்தது.

காங்கிரசுக்கு சரிவுகாலம் 1960 களில் தொடங்கியது. முதன்முதலில் கம்யூனிஸ்டுகளிடம் கேரளாவில் ஆட்சியைப் பறிகொடுத்தது காங்கிரஸ். பின்னர் 1967-ல் தமிழகத்தில் திமுகவிடமும், தொடர்ந்து மே.வங்கத்தில் கம்யூனிஸ்டுகளிடமும் பறிகொடுத்த ஆட்சியை இன்றுவரை மீட்கமுடியவில்லை. இதுபோன்று தொடர்ந்து பல்வேறு மாநிலக் கட்சிகளிடம் ஆட்சியை பறிகொடுத்துவந்த காங்கிரஸ் 2014 -ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் அந்தக் கட்சியிடமும் ஏராளமான மாநிலங்களை தானம் கொடுத்துவிட்டு இப்போது பரிதாபமான நிலையில் உள்ளது.

 

தற்போதைக்கு மொத்தமுள்ள 31 மாநிலங்களில் பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது . கர்நாடகத்தில் நித்தியகண்டம் பூரணஆயுசு என்பது போல மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது சுத்தமாக துடைத்தெறியப்பட்டு விட்டது.

 

தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் ஆளும் 6 மாநிலங்களில் பஞ்சாப், புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் நூலிழை மெஜாரிட்டியுடன் ஆட்சி நடக்கும் கர்நாடகா, ம.பி, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் டெல்லியில் கூடியுள்ளனர். இந்தக்கூட்டத்தில் என்னென்ன பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் உடல் நிலையைக் காரணம்காட்டி பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பங்கேற்கவில்லை. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தாமதமாக பங்கேற்றார்.

இதனால் புதுச்சேரி நாராயண சாமி, ம.பி.யின் கமல்நாத், ராஜஸ்தானின் அசோக்கெலாட், ஆகியோருடன் கூட்டணி முதல்வர் என்ற வகையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோருடன் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். சிறிய அறையில் இருக்கைகள் பல காலியாக கிடக்க 4 பேருடன் மட்டும், ஒருவித இறுக்கமான சூழலில், சோகமான மனநிலையில் மன்மோகன்சிங் இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒப்புக்கு நடத்தினர்.

இந்தக் காட்சியை பார்க்கும்போது, நாட்டை பன்னெடுங்காலம் ஆண்ட காங்கிரசுக்கு இந்த பரிதாப நிலையா? என்று உச்..கொட்ட வைத்துள்ளது. இதனால்தான் தோல்வி தந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இந்தக் கூட்டத்தை நீங்களே நடத்துங்கள் என்று மன்மோகன்சிங் பக்கம் கை காட்டிவிட்டு நழுவி விட்டதாகக்கூட டெல்லியில் கமெண்ட் அடிக்கின்றனர்.

Tags:

Comments are closed.