காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது நீதிமன்றப்படியேறி ஜாமீன் பெற்று வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியே தற்போது ஜாமீன் வண்டியாகி போனது என்று பிரதமர் நரேந்திரமோடி கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார்.

மேலும், எதிர்க் கட்சிகள் நமது ராணுவத்தைப் பற்றி சந்தேகங்களைக் கிளப்பிவருவதோடு தேசிய பாதுகாப்புப் பிரச்சனைகளில்கூட அரசியலைப் புகுத்தி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் மொத்தம் ரூ.2,100 கோடி செலவிலான 13 நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை மோடி தொடங்கிவைத்தார்.

பயனாளிகளுக்கு அரசாங்க நலத்திட்டங்களை வழங்கிய மோடி பேசியதாவது:

''மூத்த காங்கிரஸ்தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும், பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது நீதிமன்றப் படியேறி ஜாமீன் பெற்றுவருகிறார்கள். காங்கிரஸ் கட்சியே தற்போது ஜாமீன் வண்டியாகிப் போனது. காங்கிரஸ் அரசு எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும். பொதுமக்கள் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மற்றும் வளர்ச்சிக்கான எந்த விதமான பார்வையும் அவர்களிடத்தில் இல்லை.

தேசிய ஜனநாயக அரசு ராணுவத்தில் இருந்து வந்த வேறுபாடுகளைக் களைந்து ஒரேதரம் ஒரே ஓய்வூதியம் என்ற நிலையைக் கொண்டு வந்துள்ளது. இதற்காக, இதற்கான ராணுவத்தின் சான்றுகளை கேள்விக்குட் படுத்தும் எதிர்க் கட்சிகள் பாவம் செய்துள்ளன. அதன் விளைவு, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்துவரக்கூடும்.

முந்தைய அரசாங்களில் ஏற்பட்ட வேலையின்மை எப்பொழுதும் மறக்கமுடியாது. விவசாயிகளின் ஒவ்வொரு துளி வியர்வைக்குமான மரியாதையை நாம் செய்யவேண்டும். அதற்காக அவர்களின் வேளாண்மை சார்ந்த உற்பத்தி குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியுள்ளோம். அவ்வகையில் 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று முயன்றதில் மத்திய அரசு அவர்களுக்காக கடுமையாக உழைத்துவருவது உறுதியாகியுள்ளது.

மத்தியில் மற்றும் மாநிலங்களில் செயல்பட்டு வரும் பாஜக அரசாங்கங்கள் வளர்ச்சிமட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கடமை உணர்வோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டு வருகின்றன. தொடர்ச்சியான அரசின் முயற்சிகளால் இன்று 5 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய அரசின் பணிகள் குறித்தும் சர்வதேசளவில் பாராட்டப்பட்டது.

ராஜஸ்தான் கோரியுள்ள தேசிய அளவிலான திட்டங்களை மத்திய அரசு பரிவோடு அணுகும். அவர்களது லட்சியமான கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் அதாவது மாநிலத்தின் 40 சதவீத மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய வகையிலான 2 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை அளிக்கும். மேலும் குடி நீர் பற்றாக் குறையையும் இது போக்கும்.''

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply