மதம், ஜாதி என பாகுபாடுகாட்டாமல், அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிக்கும் சமாதானத்தின் நண்பர்கள், என போலீசை புகழ்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

டில்லி போலீஸின் 73வது உயர்வு நாள் விழா இன்று (பிப்.,16) நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், விழாவில் பேசியதாவது: மதம் அல்லது ஜாதிகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிக்கவே போலீஸ் செயல் படுகிறது. இவர்கள் யாருடைய எதிரியும் அல்ல. சமாதானத்தின் நண்பர்களான இவர்கள், மதிக்கப்படவேண்டும். டில்லிக்கு செல்லும் போதெல்லாம், போலீஸ் நினைவு சின்னத்தை பார்வையிட்டு, தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம்செய்த 35 ஆயிரம் போலீஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

தேசத்திற்காக இவர்கள் உயிரை கொடுத்துள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதேபோல், அவர்களின் பணியின் தன்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது பாதுகாப்புக்காகதான் போலீஸ் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

அதனாலேயே போலீசை விமர்சிப்பது நல்லதல்ல. டில்லி போலீசை இந்தியாவின் இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் படேல்தான் தொடங்கினார் என்பது பெருமைக்குரிய விஷயம். இது இந்ததுறைக்கே முழு உத்வேகம் அளிக்கிறது என்பது உறுதி. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.