பாகிஸ்தான் ஆதரவு பயங்கர வாதத்துக்கு இந்தியா முடிவுகட்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.


தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியபோது, மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பதவியேற்று 3 ஆண்டுகாலத்தில், மத்திய உள்துறை அமைச் சகத்தின் செயல்பாடு குறித்து அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:


உலகில் அதிகளவில் முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தியாதிகழ்கிறது. எனினும், இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு காலூன்றுவதில் தோல்வியடைந்துவிட்டது. நாட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றிவருகிறது. நாடுமுழுமைக்கும் இதுவரையிலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் 90 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஐ.எஸ்., அன்சால் உல் அம்மா ஆகிய அமைப்புகளையும் மத்திய அரசு சேர்த்துள்ளது.


முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்ற 2011-14ஆம் ஆண்டு காலத்தை ஒப்பிடுகையில், 2014-17ஆம் ஆண்டு காலத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் 25 சதவீதம்வரை குறைந்துள்ளன. 368 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: இந்தியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்தியராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் துல்லியத்தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நடைபெறும் ஊடுருவல்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 45 சதவீதம் குறைந்துள்ளன.


கடந்த 2014-17ஆம் ஆண்டுகால கட்டத்தில் 368 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கர வாதத்துக்கு மத்திய அரசு நிச்சயம் முடிவு கட்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவுவதையும் மத்திய அரசு உறுதிப்படுத்தும்.காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண சிலகாலம் பிடிக்கும்: காஷ்மீர் விவகாரம் என்பது மிகவும் பழைமையானது. கடந்த 1947-ஆம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. நமது விரல்களை முறித்துக்கொண்டு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண முடியாது. ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்  பதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.


இதுதொடர்பாக நம்மிடம் சிலதிட்டங்கள் உள்ளன. அதை குறிக்கோளாக கொண்டு பணியாற்றிவருகிறோம். எதிர்காலத்தில் இப்பிரச்னைக்கு தீர்வுகாணப்படும். இதற்கு சிலகாலம் பிடிக்கலாம் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.


அப்போது அவரிடம், நிரந்தரதீர்வு என்பது அரசியல் ரீதியாக காணப்படுமா? ராணுவ ரீதியில் காணப்படுமா? என்று பிடிஐ செய்தியாளர் கேள்வியெழுப்பினார். அதற்கு ராஜ்நாத்சிங் நேரடியாக பதிலளிக்கவில்லை. விரிவான மற்றும் ஒருங்கிணைந்த தீர்வாக அது இருக்கும் என அவர் தெரிவித்தார்.


பேச்சுவார்த்தைக்கு தயார்: பிரிவினைவாத தலைவர்களுடனான பேச்சு வார்த்தை நடத்தப்படுமா? என்று ராஜ்நாத் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: பேச்சு வார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது என்று ஆரம்பம் முதலே தெரிவித்துவருகிறேன். பேச்சு வார்த்தை நடத்த யார் முன்வந்தாலும், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க முடியும்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத்தை பாகிஸ்தானே தூண்டிவிடுகிறது. இதில் எந்தசந்தேகமும் இல்லை. காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் விரைவில் களையப்படும். இதை நாங்கள் உறுதிசெய்வோம். வன்முறை அதிக காலம் நீடிக்காது.


காஷ்மீரில் பாகிஸ்தான் என்ன செய்கிறதோ, அது அந்தமாநில இளைஞர்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகும். அதை வெற்றியடைய நாங்கள் விடமாட்டோம்.காஷ்மீர் இளைஞர்களிடம் கற்கள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இளைஞர்களின் சிறந்த எதிர் காலத்துக்கான பாதையில் முட்டுக்கட்டை போடும் அனைத்து கற்களையும் அகற்றவேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும். காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் காரணிகள் அனைத்தும் படிப்படியாக அகற்றுவோம் என்றார் ராஜ்நாத் சிங்.


காஷ்மீரில் போராட்டக்காரர் ஒருவர் ராணுவ ஜீப்பின் முன் பகுதியில் மனித கேடயமாக கட்டி எடுத்துச் செல்லப்பட்டதை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "ராணுவம் தனது பணியைத்தான் செய்கிறது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தகருத்து சரியானதுதான்' என்றார்.

Leave a Reply