எம்.பி.க்களால் தத்தெடுக்கப் படும் கிராமங்களை நிதிப்பற்றாக்குறை காரணமாக மேம்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. இதைசமாளிக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா ரூ.50 லட்சம் வளர்ச்சிநிதி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்து வருகிறார்.

நாட்டின் முதுகெலும்பான கிராமங்களை முன்னேற்ற பிரதமர் மோடி கடந்த 2014, அக்டோபரில் எம்பி.க்கள் முன் மாதிரி கிராம திட்டத்தை (சன்ஸத் ஆதர்ஷ் கிராம் யோஜனா) அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தில் ஒவ்வொரு எம்பி.யும் 2015-16-ம் நிதியாண்டில் ஒருகிராமத்தை தத்தெடுத்து மேம்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. 2019-க்குள் இதை மேம்படுத்தியபின் மேலும் இரு கிராமங்களை தத்தெடுக்கலாம் எனக் கூறியிருந்தார்.

இதற்காக மத்திய அமைச்ச கங்களின் திட்ட நிதி மற்றும் எம்.பி.க்கள் தொகுதிமேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. என்றாலும் மற்ற கிராமங்களைவிட முன்மாதிரி கிராமங்களை உருவாக்க நிதிப்பற்றாக்குறை தடையாக உள்ளதாக புகார் எழுந்தது.

இதை சமாளிக்க முன் மாதிரி கிராமங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஒதுக்க அதிகாரிகளுடன் மோடி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு 5 மாநில தேர்தலுக்குப் பின் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply