குஜராத் முதல்வராக விஜய்ரூபானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதின் பட்டேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் தலைவர்கள், 75 வயது நிரம்பியதும் கட்சிப்பொறுப்புகளில் இருந்து விலகி, அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடவேண்டும் என்ற எழுதப்படாத விதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் 75 வயது நிறைவடைய இருக்கும் குஜராத்முதல்வர் ஆனந்திபென் படேல் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து புதியமுதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம், காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், பாஜக எம்ஏல்ஏக்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பதவிக்கு அமித்ஷா, விஜய் ரூபானி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

விஜய் ரூபானி, தற்போது வகித்துவரும் அமைச்சர் பதவியே தனக்கு திருப்தி அளிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் குஜராத் மாநில முதல்வராக விஜய்ரூபானி தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக நிதின் பட்டேல் தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தின் புதிய முதல்வராக தேர்வாகியுள்ள விஜய் ரூபானி, 61, ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்; 1956 ஆகஸ்ட், 2ல் பிறந்தார். பி.ஏ., – எல்.எல்.பி., பட்டம் பெற்றுள்ளார்.மாணவராக இருக்கும் போதே அகிலபாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார்.

1971ல் ஜன சங்கத்தில் சேர்ந்தார். ஜன சங்கம் தான், 1980ல் பா.ஜ.,வாக உருவெடுத்தது.அது முதல் பா.ஜ.,வில் இருந்துவரும் இவர், நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது சிறைசென்றார். 1987ல் ராஜ்கோட் நகராட்சி தலைவராகவும், 1996ல் ராஜ்கோட் நகரமேயராகவும் பதவி வகித்தார்; 2006ல் ராஜ்யசபா எம்.பி.,யானார். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, இவர் அம்மாநில பா.ஜ., பொதுச்செயலராக பதவி வகித்தார்.

2014ல், குஜராத் சட்ட சபை சபாநாயகராக இருந்த வாஜூபாய் வாலா ராஜினாமா செய்ததால், ராஜ்கோட் மேற்கு சட்ட சபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்.

ஆனந்திபென் அமைச்சரவையில், இவர் போக்குவரத்து, குடிநீர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக பதவி வகித்தார். ஆனந்திபென் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், புதியமுதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply