தமிழகத்தில் குளச்சல் அருகே அமையவுள்ள புதிய துறைமுகம் குறித்து கருத்துகள் மோதுகின்ற நிலையில், மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து துணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களுடன் விஜயபாரதம் ஆசிரியர்

ம. வீரபாகு தொலைபேசி வழியே கண்ட நேர்காணல்.

 

குளச்சல் (இனயம்) வர்த்தக துறைமுகம் பெரும் பிரச்சினையை கிளப்பி உள்ளதே. இத்திட்டம் கட்டாயம் தேவை என்று கருதுகிறீர்களா?

தமிழகத்தின் சரித்திரத்தோடு இணைந்த பழம்பெரும் துறைமுகங்களில் குளச்சல் துறைமுகம் ஒன்று. இத்துறைமுகத்தைக் கொண்டு வருவதே தங்கள் லட்சியம் என்று வாக்குறுதி கொடுக்காத வேட்பாளர்களே கன்யாகுமரி மாவட்டத்தில் இல்லை.

தமிழக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குளச்சல் வர்த்தகத் துறைமுகத்தை பெரிய துறைமுகமாக மத்திய அரசு ஏற்று நடத்த 2015 செப்டம்பர் ஒன்றாம் தேதி அனுமதி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி

ஜெ. ஜெயலலிதா, தமிழ்நாட்டின் அறுபது ஆண்டு கால கனவுத் திட்டமான இத்திட்டத்தை ரூபாய் 28 ஆயிரம் கோடி முதலீட்டில் தமிழகத்திற்குத் தந்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டத்தை தமிழகத்திற்குத் தருவதில் உறுதியாக இருக்கின்ற மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டின் மொத்த சரக்குப் பெட்டகப் போக்குவரத்து 10.7 மில்லியன். நாம் அனுப்பும் பெட்டகங்களில் 7.4 மில்லியன் சரக்கு பெட்டகங்கள் நாம் கொண்டு சேர்க்க வேண்டிய நாடுகளுக்கு நேரடியாகவே அனுப்பப்படுகின்றன. எஞ்சியவற்றில் 2.7 மில்லியன் சரக்கு பெட்டகங்களை நாம் அனுப்ப வேண்டிய நாட்டிற்கு நேரடியாக அனுப்பும் வசதி இல்லாத காரணத்தால் இப்பெட்டகங்களை இலங்கையின் கொழும்பு, சிங்கப்பூர் போன்ற சில நாடுகளின் துறைமுகங்களில் இறங்கி வைக்கின்றோம். அங்கிருந்து பிற நாட்டு கப்பல்கள் மூலம் நாம் கொண்டு செல்ல வேண்டிய நாட்டிற்கு கொண்டு செல்கின்றோம். இதற்கு அடிப்படையான காரணம் பெரிய கப்பல்களைக் கையாளும் அளவிற்கு தூத்துக்குடி, கொச்சி போன்ற பல துறைமுகங்களில் வசதி அமையவில்லை.kulachal

இதன் காரணமாக நமது நாட்டின் சரக்குப் பெட்டகங்கள் பலமுறை ஏற்றி இறக்கப்படுவதோடு, கால விரயமும் கட்டண அதிகரிப்பும், பொருள் சேதத்திற்கான வாய்ப்பும் அதிகரிப்பதோடு, தேவையற்ற முறையில் மற்றொரு நாட்டில் நமது சரக்குகளை ஒப்படைத்து செல்லும் சூழ்நிலை நிலவிவருகின்றது. இதன் விளைவாக நமது நாட்டிற்கு ஆண்டு தோறும் ஏற்படும் இழப்பு ரூபாய் 1,500 கோடி.

குளச்சல் (இனயம்) துறைமுகம் அமைவதின் மூலம் மேற்கண்ட சிரமங்கள் அனைத்தும் நீக்கப்பெற்று நம் சரக்கு பெட்டகங்கள் நாம் அனுப்ப வேண்டிய நாடுகளுக்கு நாமே நேரடியாக அனுப்ப முடியும்.

குளச்சலில் துறைமுகத்தை அமைக்காமல் உங்கள் விருப்பப்படி இனயத்திற்கு கொண்டு சென்றது எந்த வகையில் நியாயம்?

கட்டப்போவது பொன். ராதாகிருஷ்ணனின்  கார் ஷெட் அல்ல! தலைமுறை தலைமுறைக்கும் தமிழர்களுக்கும் தாய் நாட்டிற்கும் உதவப் போகின்ற தலைசிறந்த துறைமுகம்.

குளச்சலில் முன்பு துறைமுகம் அமைத்திருந்த பகுதி தற்போது நூற்றுக்கணக்கான வீடுகளால் நிரம்பப் பெற்றுள்ளது. அப்பகுதியிலேயே ஒரு மீன்பிடி துறைமுகம் கட்டி வருகிறார்கள். மேலும் கோயில், சர்ச், மசூதி என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அங்குள்ளன. இப்பகுதியில் துறைமுகம் கட்டப்பட்டால் இவை அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும். மேலும், துறைமுகத்திற்காக அமைக்கப்பட வேண்டிய நான்கு வழிச் சாலை, ரயில் பாதை அமைக்கப்படும்போதும் தற்போதைய குளச்சல் நகரத்தின் முக்கியப் பகுதிகள் அழியும் சூழ்நிலை ஏற்படும்.

இவற்றை எல்லாம் ஆராய்ந்து தெரிந்த பின்னர் தான் 2000, 2010 ஆண்டுகளில் நடத்தப்பட்ட துறைமுக ஆய்வுக்கான அறிக்கைகளில் மணவாளக்குறிச்சி பகுதியில் துறைமுகம் அமைக்கப்படுவது தான் சரியானது என்று குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது நமது பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடத்திய ஆய்வினை உலகப் புகழ்பெற்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டிப்சா நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வினை கன்யாகுமரி, மணவாளக்குறிச்சி, குளச்சல், இனயம் போன்ற பகுதிகளில் நடத்தி, இனயம் தான் சாலச்சிறந்தது என இந்நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. எனது விருப்பப்படி துறைமுகம் அமைக்கும் அளவிற்கு நான் கடல்சார் அறிவு பெற்றவனோ, இந்த விஷயத்தில் கண்மூடித்தனமான முடிவு எடுப்பவனோ அல்ல! ஆய்வு நடத்தியது துறைமுகம் அமைப்பதற்கான வசதி, குறைந்த அளவு சேதம், நிறைந்த வணிகம், காலத்தாலும் அழிக்க முடியாத நிலைத்தத் தன்மை ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் அந்த ஆய்வின் அடிப்படையில் தான் தற்போதைய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

13 கிராமங்கள் மற்றும் 25,000 மீனவர்களை அழித்து இப்படி ஒரு துறைமுகம் தேவையா என்கிறார்களே?

கன்யாகுமரி மாவட்டத்தில் மொத்த மீனவ கிராமங்கள் 42, இனயத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை ஒரு சில மட்டுமே!

ஆனால் 13 கிராமங்களையும் 25,000 மீனவர்களையும் அழிக்கப் போவதாக பொய்ப் பிரச்சாரத்தை உருவாக்குகின்றார்களே ஏன்?

அநியாயமான முறையில் புறம்போக்கில் உள்ள ஒரு குடிசையும் கூட பாதிக்கப்படக் கூடாது என்ற கவனத்தோடு, மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டங்களையும் தீட்டுகின்றோம். துறைமுகத்திற்காக கரைப்பகுதியில் நிலம் எடுத்தால் மக்களின் வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் அவர்களின் சொத்துக்களும் அதிக அளவில் பாதிக்கும் என்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கடலை நிரப்பி 400 ஹெக்டேர் நிலப்பரப்பை கடலுக்குள் உருவாக்கி அதில் துறைமுகத்தை நிர்மாணிக்க முடிவெடுத்துள்ளோம். இதில் அரசுக்கு செலவு அதிகமானாலும் மக்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை என்ற மனநிறைவு ஏற்படுகிறது. ஒருவேளை வேறு வழியின்றி யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீட்டினை கடந்த காலத்தில் இல்லாத அளவிற்கு நான்கு மடங்கு அதிகமாக கொடுக்கவும் மீனவ சகோதரர்களுக்கு மீன் பிடிப்பதற்கு மற்ற பல வசதிகள் செய்து கொடுக்கவும் திட்டங்கள் மேற்கொண்டுள்ளோம்.

30 கிலோமீட்டர் தூரத்தில் விழிஞ்சம் துறைமுகம் வரும்போது இந்த துறைமுகம் கட்டாயம் தேவைதானா?

நமது நாட்டில் இருந்து அனுப்பப்படும் 2.7 மில்லியன் சரக்கு பெட்டகங்களில் 60 சதவீதப் பெட்டகங்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படுகின்றன. அந்த சரக்குப் பெட்டகங்களில் 60 சதவீதப் பெட்டகங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. இந்திய சரக்கு பெட்டகங்களைக் கையாளும் அளவிற்கு இந்த இரண்டு துறைமுகங்களும் கட்டாயமாக தேவைப்படுகின்றன. விழிஞ்சம் துறைமுகத்தின் முதல் பகுதி முழுமைபெறும் போது அத்துறைமுகம் 1 மில்லியன் பெட்டகங்களையும் குளச்சல் (இனயம்) துறைமுகத்தின் முதல் பகுதி முழுமைபெறும். விழிஞ்சம், குளச்சல் துறைமுகத்தால் முறையே 4, 8 மில்லியன் பெட்டகங்களை கையாளும் திறம் பெற்றவையாக அமையும். எதிர்காலத்தில் இவற்றின் திறன்கள் அதிகமாகவும் வாய்ப்புண்டு.

இலங்கையின் கொழும்பு, ஹம்பன்தோட்ட துறைமுகங்கள் முறையே 5 மில்லியன் பெட்டகங்களைக் கையாளும் திறன் பெற்றதாக அமைந்துள்ளன. இவற்றை முறையே 13 மற்றும் 20 மில்லியன் பெட்டகங்களைக் கையாளும் திறன் படைத்ததாக உயர்த்தப்படுகின்றன. மேலும் காலே என்ற புதிய துறைமுகத்தை 6 மில்லியன் பெட்டகங்களை கையாளும் திறம் படைத்ததாக உருவாக்குகின்றனர். என் கருத்தின் அடிப்படையில் நமது தேவைக்காக மேலும் பல துறைமுகங்கள் தேவைப்படும் என்று கருதுகின்றேன்.

கேரள முதல்வரும் அரசும் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்களும் குளச்சல் துறைமுகத்தை அமைக்கக் கூடாது என்கிறார்களே, அதன் பின்னணி என்ன?

விழிஞ்சம் துறைமுகம் கொண்டு வரவேண்டும் என்று கேரள பாரதிய ஜனதா கட்சியும் நாமும் சேர்ந்து சொன்னபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளத்தின் முந்தைய அரசின் முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் இத்துறைமுகத்திட்டத்தை கொண்டு வரலாமா? வேண்டாமா? என்று இரட்டை மனநிலையில் யோசித்தப்போது, இன்றைய முதல்வர் பினரயி விஜயனும் அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்களும் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். மேலும் கேரள அரசியல்வாதிகள் தங்கள் தவறை மறைப்பதற்காக பொன். ராதாகிருஷ்ணன் தான் விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை வரவிடாமல் தடுப்பதாகப் புரளியை கிளப்பினார்கள். இத்தருணத்தில் பிரதமர் மோடி அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, விழிஞ்சம் துறைமுகத்தை உடனடியாக ஆரம்பிக்காவிட்டால் குளச்சல் துறைமுகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தார். நிதின் கட்கரி அவர்களின் இந்த அறிக்கை விழிஞ்சம் துறைமுகத்தை வைத்து அரசியல் சூதாடிய கேரள அரசியல்வாதிகளுக்கு பேரிடியாக விழுந்தது. இதன் காரணமாக கேரள அரசியல்வாதிகள் ஒன்று திரண்டு விழிஞ்சம் துறைமுகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே விழிஞ்சம் துறைமுகத்தைக் கொண்டுவந்த பெருமை மோடி அரசைத் தான் சாருமேத் தவிர கேரள அரசியல்வாதிகளைச் சாராது.

கேரள அரசியல்வாதிகளையாவது ஏதோ ஒரு வகையில் புரிந்து கொள்ளலாம், கன்னியாகுமரி மாவட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற உறுப்பினர்களின் மனநிலையின் பின்னணியை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களால் முடிகிறதா பாருங்கள்.

கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ், தன் தொகுதி மக்களுக்குத் தொல்லை தருகின்ற குளச்சல் துறைமுகம் வேண்டாம் என்று கூறுகின்றார். குளச்சலை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் அவர்களோ, குளச்சல் நகரமே அழிந்தாலும் பரவாயில்லை குளச்சலில் தான் துறைமுகத்தை அமைக்க வேண்டும் என்கிறார். பத்பநாபபுரம் எம்.எல்.ஏ. திமுகவின் மனோதங்கராஜ் தொகுதியில் கடல் எல்லையே கிடையாது. இருப்பினும் துறைமுகம் வரவே கூடாது என்ற போராட்டத்தின் முன்னணி கதாநாயகனாகத் திகழ்கின்றார். மற்ற சட்டமன்ற உறுப்பினர்களான விஜயதாரணி, சுரேஷ் ராஜன், ஆஸ்டின் ஆகிய மூவரும் கூட முதல் மூவருடன் சேர்ந்து துறைமுகத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

மேற்கூறிய எதிர்ப்புகளை எதிர்த்துப் போராடிவரும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் முகமது இஸ்மாயில், டாக்டர். குமாரதாஸ், ஜான் ஜேக்கப், திரு. சி. வேலாயுதம், விஜயராகவன், டாக்டர். புஷ்பலீலா ஆல்பன், லாரன்ஸ் போன்ற அனைவரும் துறைமுகத்தை கொண்டுவந்தே தீரவேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றார்கள்.

விந்தை ஒன்றை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகின்றேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2300 கோடி ரூபாய் செலவில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்க 1,000 ஏக்கர் நிலமும், 99 ஓலை வீடுகள் உள்பட 1,000 வீடுகளும், 14 வழிபாட்டு தலங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பல ஜாதி, மதங்களை சேர்ந்த வீடு மற்றும் நிலங்கள் இழந்த இம்மக்களுக்காக குரல் கொடுப்பதற்கோ, போராடுவதற்கோ கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவும் அரசியல் கட்சிகளும் முன்வரவில்லையே ஏன்?

நிறைவாக என்னதான் சொல்ல விரும்புகின்றீர்கள்?

கேரளத்தில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கான இடத்தைத் தேடி அணுவிஞ்ஞானி பாபா, டாக்டர். அப்துல் கலாம் ஆகியோர் கேரளத்தில் சுற்றியபோது, கிறிஸ்தவ பேராயரின் மாளிகை (ஆடிண்டணிணீ ஏணிதண்ஞு) வளாகம் தான் சிறந்த இடம் என்று கருதி, நம் தாய் திருநாட்டிற்காக அவ்விடத்தை கேட்டனர். பேராயர் அவ்விருவரையும் ஞாயிறன்று சர்ச்சுக்கு வரும்படி அழைத்தார். ஞாயிறு அன்று பிரார்த்தனை முடிவில் நாம் பிரார்த்தனை செய்யும் இந்த இறைவனின் வீட்டையும் (சர்ச்) இந்த வளாகத்தையும் நாட்டின் தேவைக்காக அணு விஞ்ஞானிகள் கேட்கின்றார்கள். இது குறித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று பேராயர் கேட்டார். அப்போது வழிபாட்டுக் கூடத்திலிருந்த அனைவரும் ‘ஆமேன்’ என்று ஆமோதித்ததாக அணுவிஞ்ஞானி டாக்டர். அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். அந்த இடம் தான் இன்று நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியின் முக்கியமான இடமாக திகழ்கின்றது.

விவசாயிகளின் மேம்பாட்டிற்காக வைகை அணையைக் கட்டியபோது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பூர்வீக கிராமமும் சுற்று கிராமங்களும் அவ்வூர் மக்களால் இன்முகத்தோடு கொடுக்கப்பட்டதாகவும் இவ்வணையை தான் கடந்த செல்லும்போதெல்லாம் தனது குடும்பத்தினர் தமிழ்ச் சமுதாயத்திற்காகத் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் கொடுத்ததை பெருமையோடு நினைவு கூறுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைப்பதற்காக மக்கள் தாங்களாகவே தங்கள் நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை தந்துள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

நாடு சிறப்புற வாழ்வதற்காக தம் வாழ்க்கையை அழித்தவர்கள் உண்டு. தம் வீட்டை அளித்தவர்களும் உண்டு என்பதை சரித்திரம் நமக்கு சொல்லி தருகின்றது. குளச்சல் வர்த்தக துறைமுகம் வாழ்வை அழிப்பதற்காக வருவது அல்ல, நமக்கு வாழ்க்கை அளிப்பதற்காக வருவது. அதனை வரவேற்று வளமுடன் வாழ்வோம்.

Leave a Reply