மும்பையில், தொழில் துறை கூட்டம் ஒன்றில், மத்திய கப்பல், சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் குளச்சல், மராட்டியத்தில் வாத்வான், மேற்கு வங்கத்தில் சாகர் ஆகிய 3 புதிய துறைமுக பணிகளுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம்கோடி முதல் 20 ஆயிரம் கோடி வரை முதலீடு தேவைப் படுகிறது.

இந்த பணிகளுக்கான டெண்டர், மார்ச் மாதத்துக்குள் வெளியிடப் படும். ஏப்ரல், மே மாதவாக்கில் துறைமுக பணிகள் தொடங்கும்.

தற்போது, நீர்வழித் தடங்கள் வழியான சரக்கு போக்கு வரத்து 3.5 சதவீதமாக உள்ளது. 2019-ம் ஆண்டுக்குள், இதை 15 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில், 12 பெரிய துறை முகங்களும், 3 சிறிய துறைமுகங்களும் ரூ.6 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த பணம்முழுவதும் துறைமுகங்களை நவீன மயமாக்குவதற்கும், கம்ப்யூட்டர் மயமாக்குவதற்கும் பயன் படுத்தப்படும்.

தற்போது, சுற்றுச் சூழல் பெரிய பிரச்சினையாக உள்ளதால், சுத்தமானதும், மலிவானதுமான திரவ இயற்கை எரி வாயு மூலம் கப்பல்களை இயக்க நாம் கவனம்செலுத்த வேண்டும்.

ஆற்றுப்படுகைகளை தூர்வாரும் பணியை மேற்கொள்ள தேசியநெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், மம்தாபானர்ஜி உள்ளிட்ட முதல்-மந்திரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். விரைவில் இது தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். முக்கிய ஆறுகளின் குறுக்கே செல்லும் 111 நீர்வழித் தடங்களை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

மீனவர்கள், கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான படகுகளை வாங்கவேண்டும். அவர்களுக்கு வட்டி இல்லாகடன் வழங்கப்படும். ஆனால், அசலை திருப்பிச் செலுத்தும் வரை, அவர்கள் பிடிக்கும் மீனில் ஐந்தில் ஒருபகுதியை அரசுக்கு கொடுத்துவிட வேண்டும் என்று  நிதின் கட்காரி கூறினார்.

Leave a Reply