பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தினத்தந்தி நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– விஜயகாந்த், அன்பு மணி ஆகியோரை நீங்கள் முதல்–அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டும், அவர்கள் உங்களுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லையே?

பதில்:– இது முற்றிலும் தவறு. எங்கள்கட்சியில் முதல்–அமைச்சர் வேட்பாளர் கிடையாது என்றுதான் சொன்னோம். அவர்கள், முதல்–அமைச்சர் வேட்பாளர்கள் என்று மாநில தலைவரான நான் ஒரு போதும் அப்படி சொல்ல வில்லை.

கேள்வி:– கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேமுதிக., பா.ம.க. கொண்ட மெகாகூட்டணி அமைத்தீர்கள். அந்தகூட்டணியை சட்டசபை தேர்தலில் தொடர முடியாமல் போனது பா.ஜனதாவின் தோல்விதானே?

பதில்:– பாராளுமன்ற தேர்தலின்போது மோடியை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இப்போது மாநில தேர்தல். இங்கு விஜய காந்தை முதல்–அமைச்சராக, பாமக. ஏற்றுகொள்ளாது. அதே போல் அன்புமணியை முதல்–அமைச்சராக தேமுதிக. ஏற்றுக் கொள்ளாது. இருப்பது 1 முதல்–அமைச்சர் பதவி தானே? 10 முதல்–அமைச்சர் பதவிகளா? இருக்கிறது. அதனால்தான் நாங்கள் சொன்னோம் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கலாம். அதன்பின் முதல்–அமைச்சரை தேர்வுசெய்யலாம் என்று. ஆனால் அதனை அவர்கள் கேட்கவில்லை.

கேள்வி:– முதல்அமைச்சர் வேட்பாளரை அறிவித்தே அனைத்து கட்சிகளும் தேர்தலைசந்திக்கிறது. ஆனால் பா.ஜ.க.,வில் ஏன் முதல்–அமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வில்லை?

பதில்:– படித்துதான் டாக்டர் ஆக வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். வெறும் 2 மாதத்திற்கு முதல்–அமைச்சர் வேட்பாளராக இருந்தால் போதுமா?. நிரந்தரமாக முதல்–அமைச்சராக இருக்க வேண்டாமா?. விஜயகாந்தையும், அன்புமணியையும் முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்கள். அப்படி அறிவித்ததால் அவர்கள் முதல்–அமைச்சர் ஆகி விட முடியுமா? தனியாக நின்றால் அவர்கள் வெற்றி பெற முடியாது என்று அவர்களுக்கே தெரியும்.

 

கேள்வி:– தனியாக நின்றால் விஜய காந்தும், அன்புமணியும் வெற்றி முடியாது என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் தனியாகநிற்கும் பா.ஜனதா மட்டும் எப்படி வெற்றிபெறும் என்று நம்புகிறீர்கள்?

பதில்:– ஊழலற்ற ஆட்சி என்ற வார்த்தையை சொல்வதற்கு பா.ஜனதாவிற்கு மட்டுமே தகுதிஉள்ளது. அந்த தகுதியுடன், மத்தியில் வளர்ச்சியான மோடியின் ஆட்சிக்கு மக்கள் வாக்களி ப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அதனால் நாங்கள் வெற்றிபெறுவோம்.

கேள்வி:– கடந்த சட்ட சபை தேர்தலில் பா.ஜனதா வெறும் 2 சதவீத வாக்குகள்தான் பெற்று இருக்கிறது. இந்தநிலையில், அதிக வாக்கு சதவீதம் வைத்திருக்கும் நாங்கள் எப்படி பா.ஜ.க.,வின் தலைமையை ஏற்க வேண்டும் என்று தே.மு.தி.க.வும், பா.ம.க.வும் கூறுகிறார்களே?

பதில்:– கடந்த பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமை யிலான கூட்டணிக்கு தமிழகத்தில் 19.2 சதவீத வாக்குகள் கிடைத்தது. அந்தவாக்குகள் அனைத்தும் மோடி பிரதமராக வரவேண்டும் என்று பா.ஜனதா கட்சிக்கு மக்கள் வாக்களித்தனர். தற்போது மோடியின் ஊழலற்ற ஆட்சியால் அனைத்து தரப்புமக்களும் பலன் அடைந்து வருகின்றனர். எனவே தமிழக சட்ட சபை தேர்தலில் அதிக வாக்குகள் பெறுவோம். ஏன் பா.ம.க., தே.மு.தி.க. கூட மற்ற கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பு விடுத்தார்கள் ஆனால் யாராவது போனார்களா?

கேள்வி: அவர்களைபோல் பா.ஜனதாவுக்கு கூட யாரும் வரவில்லையே?. ஒருசிறிய கட்சி கூட உங்கள் தலைமையிலான கூட்டணியை ஏற்கவில்லையே?

பதில்:– பா.ஜனதா கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்று வார்த்தையை யாரும் எழுதவேண்டாம் என்பது எனது கோரிக்கை. சிலசமரசங்கள் செய்திருந்தால் நாங்களும் கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் நாங்கள், எங்கள் தனித் தன்மையை இழக்காமல் தனித்துவமாக போட்டியிடுகிறோம். மக்களுக்கு நல்லதுசெய்ய வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள். ஊழலுக்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சிசெய்தோம். ஆனால் அமைய வில்லை. யாரும் எங்களுடன் வரவில்லை என்ற கவலை எங்களுக்கு இல்லை. ஆனால் உங்களைபோன்ற சகோதரர்கள்தான் இப்படி கவலைப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

கேள்வி:– முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை என்று பியூஷ் கோயலும், ஜெயலலிதாவை பார்க்க முடிகிறது என்று வெங்கையா நாயுடும் சொல்கிறார்களே? பா.ஜனதா மத்திய மந்திரிகள் இடையே இப்படி கருத்து வேறுபாடு உள்ளதே?

பதில்:– அந்தந்த மந்திரிகள் தங்கள் அனுபவத்தைசொல்லி உள்ளனர். பியூஷ் கோயல், சொன்ன குற்றச்சாட்டு சாதாரணமானது அல்ல. யதார்த்தமானது. தமிழகசூழ்நிலையை பிரதிபலித்தார். பத்திரிகையாளர்கள் என்னிடம் பேட்டி எடுக்கிறீர்கள். ஆனால் ஜெயலலிதாவிடம் பேட்டி எடுக்கமுடியுமா? நிச்சயம் முடியாது. தமிழக மீனவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக நமது முதல்–அமைச்சரை பார்க்க முடியுமா? முடியாது. மாநில மந்திரிகள் ஜெயலலிதாவை பார்க்கமுடியாது என்ற நிலை தான் உள்ளது.

வெங்கய்யா நாயுடுக்கு ஏற்பட்ட அனுபவம்போல அத்தனை பேருக்கும் இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் பியூஷ் கோயலுக்கு ஏற்பட்டஅனுபவம் போன்று தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பது தான் எங்களது கவலை.

கேள்வி:– ஜெயலலிதா மீது மத்திய மந்திரிகள் கூறும் குற்றச் சாட்டுகள், தேர்தலுக்காக சொல்லப்படுபவை என்று மாநில அமைச்சர்கள் சொல்லுகிறார்களே?

பதில்:– இது முற்றிலும்தவறு. பியூஷ் கோயல் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பொங்கல்விழா கொண்டாட திருவள்ளூர் பகுதிக்குவந்தார். அப்போது ஒருபெண், எங்களால் கமிஷன் கொடுக்காமல் ரேஷன் கார்டுகூட வாங்க முடியவில்லை என்று கூறினார். அப்போதே பியூஷ் கோயல், ‘‘தமிழகத்தில் ஊழல் தலை விரித்தாடுகிறது. மாற்றம் தேவை’’ என்று சொன்னார்.

அதே போல் நான் தொடர்ந்து அதிமுக. அரசின் தவறுகளையும், ஊழல் களையும், செயலற்ற தன்மையையும் எதிர்த்து வந்திருக்கிறேன். இதெல்லாம் எனது தனிப்பட்டகருத்து அல்ல. பா.ஜனதா தலைவரின் கருத்து என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி:– மோடி அரசின் திட்டங்களால், தமிழகமக்களுக்கு என்ன பலன் கிடைத்துள்ளது?

பதில்:– மத்திய அரசின் பலதிட்டங்களால் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பயன் அடைந்துள்ளனர். வெள்ளநிவாரண பணிகளை எடுத்துகொள்ளுங்கள். ராணுவம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து துறைகளும் இங்கு களமிறக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணபணிகள் செய்யப்பட்டன. மோடி நேரிடையாக வந்து களப்பணி யாற்றினார். ரூ.2 ஆயிரம் கோடி நிதியினை உடனடியாக வழங்கினார். கடந்தகாலத்தில் ‘‘தானே’’ புயல் வந்த போது காங்கிரஸ் கட்சி வெறும் ரூ.400 கோடிமட்டுமே தந்தது.

வளர்ச்சி திட்டங்களை எடுத்துகொண்டால் சென்னை, கோவை ஆகிய 2 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான சாலைதிட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது. அனைவருக்கும் வங்கிகணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படிசொல்லி கொண்டேபோகலாம். மிகமுக்கியமாக ஊழல் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. மத்தியில் உள்ளதுபோல், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி ஏற்பட்டால் மக்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்பதே எங்களது பிரசாரம்.

கேள்வி:– தனித்துபோட்டி என்பதால் பா.ஜனதாவுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: அதிமுக. கூட்டணி–அதிருப்தி கூட்டணி. திமுக. கூட்டணி–புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. மக்கள் நலக்கூட்டணி–மக்கள் நலனில் அக்கறை இல்லாத கூட்டணி. ஆனால் நாங்கள் எந்தவித கூட்டணி குழப்பம் இல்லாமல், மக்கள் நலனுக்காக, கட்சிகளுடன் சமரசம் செய்யாமல் தனித்து–தனித்துவத்தோடு நிற்கிறோம்.  இவ்வாறு அவர் பதிலளித்தார்.

நன்றி ; தினத்தந்தி

Leave a Reply