விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.21,000 கோடி விவசாயக் கடன் வழங்குவதற்கு நபார்டு வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதித்ததால், நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது நடைபெறும் ரபி பருவச் சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்கவும், விவசாயிகளின் பணத் தேவையைப் பூர்த்தி செய்யவும் மத்திய அரசு இந்தச் சலுகையை அறிவித்துள்ளது.


இதேபோல், ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் விதிக்கக் கூடாது என்றும் வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக, பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ், தில்லியில் புதன்கிழமை ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.


தற்போது ரபி பருவச் சாகுபடி நடைபெற்று வருவதால், விவசாயிகளுக்கு தடையின்றி பணம் கிடைத்திட வேண்டும். இதற்காக, விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடனுதவி வழங்குவதற்குகாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.21,000 கோடியை நபார்டு வங்கி அளிக்கும். இதனால், 40 சதவீதத்துக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெறுவர்.


ரபி பருவத்தில் விதைப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்குத் தேவையான ரொக்கப் பணம் விரைவாகவும், தடையின்றியும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தேவையான அளவு பணம் இருப்பில் வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கும், வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுதவிர, பயிர்க் காப்பீடு தவணைத் தொகையை விவசாயிகள் செலுத்துவதற்கு 60 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைப் பயன்படுத்தி அவர்கள் விதைகள் வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர, பொதுத் துறை நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அளிக்க வேண்டிய தொகையை மின்னணு பரிவர்த்தனை முறையில் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் பயண டிக்கெட்டை இணையதளம் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, டிசம்பர் 31-ஆம் தேதிவரை சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. "மொபைல் பேங்கிங்' உள்ளிட்ட வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இவையனைத்தும் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாகும் என்றார் அவர்.


கடன் வைத்து உரம் வாங்கச் சலுகை


வங்கிச் சேவை பெற முடியாமல் அல்லது பணத் தட்டுப்பாடு காரணமாகவும் தவிக்கும் விவசாயிகளுக்கு கடன் அடிப்படையில் உரங்களை வழங்க வேண்டும் என்று உர தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.