கடந்த திங்கட் கிழமை நள்ளிரவு தில்லி முதல்வர் இல்லத்தில் முக்கிய  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில், தில்லி தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆம்ஆத்மி எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தன் காலரைப்பிடித்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவர் தாக்கியதாக அன்ஷு பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அப்போது  அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அவர் தில்லி துணைநிலை ஆளுநரிடம் புகார் அளித்ததையடுத்து இரண்டு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தசம்பவம் தொடர்பாக, தில்லி காவல் துறையினர், தடயவியல் நிபுணர்களுடன் முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டில் வெள்ளிக் கிழமை (இன்று) சோதனை செய்தனர்.

அப்போது தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைத் தேடினர். இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அறையில் சி.சி.டி.வி ஏதும் பெருத்தப்பட வில்லை. முதல்வர் வீட்டில் இருந்த 21 கேமராக்களில் 7 கேமராக்கள் வேலை செய்ய வில்லை என்றனர்.

இந்தசோதனை குறித்து ஏடிஜிபி ஹரேந்திர குமார் சிங் பேசுகையில்: "அந்த அறைக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமாராக்கள் மூலம் விசாரணை நடத்தப்படும். மேலும் அங்கு 7 கண்காணிப்பு கேமராக்கள் வேலைசெய்யாதது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்றார்.  

இது தொடர்பாக தில்லி முதல்வரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை.

Leave a Reply