கேரள மாநிலம் கொல்லம் பரவூர் புட்டிங்கல் கோவில் திரு விழாவின் போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் கொல்லம் பரவூர் புட்டிங்கல் தேவி கோவிலில் திருவிழா நடைபெறும் போது பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும்.  ஒவ்வொரு ஆண்டும் மாவட்டநிர்வாகத்தின் அனுமதி பெற்று  கோவில்களில் பட்டாசு வெடித்து விழாக்களை கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து உள்ளது. திருவிழாவிற்காக அதிகமான பட்டாசுக்கள்வாங்கி கோவில் குடோனில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் பட்டாசு வெடிக்கப்பட்ட போது, அதிலிருந்து சென்ற தீப்பொறியானது பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில்விழுந்தது. இதனையடுத்து குடோனில் வைக்கப்பட்டிருந்த பயங்கரசத்தங்கள் எழுப்பக்கூடிய வெடிப்பொருட்கள் கொண்ட பட்டாசுகள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு அருகில் இருந்த திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கட்டிடம் ஒன்று முற்றிலும் வெடித்துச்சிதறியது. தீ விபத்து மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 75-க்கும் மேற்பட்டோர் பலியாகிஉள்ளனர் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றது.

தீ விபத்தில் காயமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு விரைந்து உள்ளது.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களிலும் சிலர் உயிரிழந்தால் பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து விசாரிக்க கேரளா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாடுகளை முற்றிலுமாக தளர்த்தியுள்ளது.

போட்டி போட்டுக்கொண்டு பட்டாசு வெடித்ததன் காரணமாகவே இந்த துயரச்சம்பவம் நேர்ந்துள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள், விமானப்படை மற்றும் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது கொல்லம் கோவில் பட்டாசு தீ விபத்து. 

நரேந்திர மோடி கொல்லம் வருகை: கொல்லம் பரவூர் புட்டிங்கல் கோவில் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக பிரதமர் நேரேந்திர மோடி தீக்காய சிகிச்சை மருத்துவ நிபுணர்களுடன் தனி விமானம் மூலம் சுமார் 3 மணியளவில் திருவனந்தபுரம் வந்தார்.

திருவனந்தபுரம் வந்தடைந்த பிரதமரை கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் வந்த மோடி, உயிரிழந்த குடும்பத்தினருக்கும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

நிவாரண அறிவிப்பு: கொல்லம் பரவூர் புட்டிங்கல் கோவில் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply