கோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வியாழக்கிழமை இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர்மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்தவர் சசிகுமார் (36). அவரது வீடு, கோவை, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டர்மில் அருகே உள்ள சுப்பிரமணிய புரம் பகுதியில் உள்ளது.


இந்நிலையில், சசி குமார் இருசக்கர வாகனத்தில் வியாழக் கிழமை இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 2 இரு சக்கர வாகனங்களில் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் நால்வர், அவரது வாகனத்தை வழிமறித்து தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பியோடி சசிகுமாரைத் துரத்திச்சென்ற மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.


ரத்த வெள்ளத்தில் கீழேசரிந்து கிடந்த சசிகுமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது சடலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.


இத்தகவல் பரவியதும் இந்து முன்னணியினர், பாஜகவினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், சசிகுமார் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார்மருத்துவமனை முன்பாகவும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாகவும் திரண்டு, காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


சசி குமார் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு வந்த கோவை மாநகர காவல் ஆணையர் அமல் ராஜை இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் முற்றுகையிட்டு தக்கநடவடிக்கை எடுக்குமாறு கோஷமிட்டனர்.
கொல்லப்பட்ட சசி குமாருக்கு யமுனா என்ற மனைவி உள்ளார். இவரது சகோதரர் சுதாகர் பாஜக இளைஞரணியின் கோவை மாவட்டச் செயலாளராக உள்ளார்.

Leave a Reply