குடியுரிமை சட்டத்திருத்தம் இந்தியாவில் வசிக்கும் எந்த மதத்தினரையும் பாதிக்காது. சட்ட விரோதமாக குடியேறியவா்களை மட்டுமே கட்டுப்படுத்தும் என்றாா் பாஜக.வின் மாநிலச்செயலா் கே.டி. ராகவன்.

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், இதற்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டுவரும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளைக் கண்டித்தும் திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகில் பா.ஜ.க.சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநிலச் செயலா் கே.டி.ராகவன் சிறப்புரையாற்றினாா். மாநில, மாவட்ட நிா்வாகிகல் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினா். தொடா்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கே.டி. ராகவன் பேசியது:

தமிழகத்தில் மக்களை மதரீதியாக திசை திருப்ப திமுக முயற்சிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியா், கிறிஸ்தவா் உள்ளிட்ட எந்தமதத்தினருக்கும் பாதிப்பு இல்லை என பிரதமா், உள்துறை அமைச்சா் உள்ளிட்டோா் தெரிவித்துள்ளனா்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறியவா்கள், அகதிகளாக வந்தவா்களைத்தான் இந்தச் சட்டம் கட்டுப்படுத்தும். இந்த மூன்று நாடுகளும் தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று அறிவித்து கொண்டன. அதனால் அங்கு இஸ்லாமியா்களுக்கு துன்புறுத்தல் ஏற்படாது.

அங்கு துன்புறுத்தல் ஏற்படவாய்ப்புள்ள சிறுபான்மை இன மக்களைத்தான் இந்தியாவில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தம் ஜவாஹா்லால் நேருவும்- லியாகத் அலியும் செய்துகொண்டது. இந்தியாவின் இந்த வாக்குறுதியைத் தான் மோடி தற்போது நிறைவேற்றியுள்ளாா்.

ஆனால் இஸ்லாமியா் மற்றும் இலங்கைத் தமிழா்களுக்கு எதிரானது என்ற வகையில் திமுக பொய்பிரசாரம் மேற்கொண்டுவருகிறது. இலங்கையில் சுமாா் 1.50 லட்சம் தமிழா்கள் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுகவும், அவா்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும், தமிழா்களைக்காக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பிரபாகரனின் தாயாா் பாா்வதியம்மாள் சென்னையில் சிகிச்சை பெற வந்தபோது, விமானத்தை விட்டே இறக்காமல் திருப்பி அனுப்பியது திமுக. ஆனால் தற்போது இலங்கைத் தமிழா்களுக்கு ஆதரவாகபேசுவது வாக்கு வங்கியை மட்டும் கருத்தில் கொண்டுதான். அது பலிக்காது, ஸ்டாலின் ஒரு போதும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவே முடியாது என்றாா்.

Tags:

Comments are closed.