சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறைகளில் நீதித் துறை தலையிடுவது ஏற்புடையதல்ல என, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப்பெண்களும் செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது, எனவே சபரி மலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது என தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து இந்த தீர்ப்புக்கு நாடுமுழுவதும் வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார்  கூறுகையில், “பெண் ஆர்வலர்கள் மட்டுமே சபரிமலைக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி மனுதாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள 6 கோயில்களில் பெண்கள் மட்டும்தான் செல்ல முடியும். சைவம், வைணவம் போன்று சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறை சாஸ்தம் எனப்படுகிறது. அதனால், அவரவர்களுக்கென இருக்கும் வழிபாட்டு முறைகளில் நீதித் துறை தலையிடுவது ஏற்புடையதல்ல. அதனால், தேவஸ்தானம் போர்டு என்ன முடிவெடுக்கிறதோ அதை நாம் ஆதரிப்போம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply