மத்தியில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி யமைக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட பாஜக முன்னாள் பொதுச்செயலர் மு.சக்தி கணபதி அண்மையில் காலமானார். இதையடுத்து, கடலூரில் உள்ள அவரது வீட்டுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக் கிழமை வந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறியவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் சரிவை எட்டுவதற்கு காரணகர்த்தாவாக இருப்பவர் ப.சிதம்பரம். அவரது ஒவ்வொரு வார்த்தையும் அந்தக்கட்சிக்கு சரிவை ஏற்படுத்துகிறது. மத்தியில் மிகப் பெரிய பெரும் பான்மையுடன் பாஜக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி.

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதற்கு காங்கிரஸ்கட்சியால் நிறுத்த திட்டமிடப்பட்டிருந்த பிரியங்கா களத்தில் நிற்காமல் ஓடிவிட்டார். அவர் போட்டியிட்டால் வைப்புத்தொகை கூட கிடைக்காது. காங்கிரஸ் கட்சி ஏறக்குறைய 60 ஆண்டுகள் நாட்டை ஆட்சிசெய்தும், நாடு அடைய வேண்டிய உச்சத்தை அடையவில்லை. ஆனால், 60 மாதகால மோடி ஆட்சியில் மிகப்பெரிய வெற்றியை நாட்டுக்கு கொடுத்துள்ளார். அரசின் அனைத்துத் துறைகளும் பெரிய சாதனைகளை புரிந்துள்ளன. தமிழக விவசாயிகள் தில்லியில் மாதக் கணக்கில் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் ஆட்சியின் போது விவசாய துறையில் ஏற்பட்டதோல்வியே தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு காரணம். தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதாக திமுக கூறிவருகிறது. எனது காரைகூட தேர்தல் ஆணையத்தினர் சோதனையிட்டனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டியது எனது கடமை. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீனவர்கள் வசிக்காத பகுதியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்சம் 30 பேருக்கு வாக்குஇல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாதி, மத பிரச்னையை தமிழகத்தில் உருவாக்கியதே காங்கிரஸ், திமுக தான். இதைவைத்தே அந்தக் கட்சிகள் அரசியல் செய்கின்றன என்றார் .

Leave a Reply