மாட்டுத்தீவன ஊழல்வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவுக்கு, தண்டனை விவரம் அளிக்கப்பட உள்ளது.

ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால்சிங், நேற்று அவருக்குத் தண்டனை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இறந்துபோன இரு வழக்கறிஞர்களுக்கு இரங்கல்தெரிவித்து, நீதிமன்ற நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, நீதிமன்ற அறையில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களை வெளியேறுமாறு கூறிய நீதிபதி சிவபால்சிங், லாலுவைப் பார்த்து, ''உங்களுக்காகப் பரிந்துரைத்து, உங்கள் நலவிரும்பிகளிட மிருந்து ஏராளமான போன் அழைப்புகள்வந்தன. ஆனால், சட்டம் தன் கடமையை செய்யும். நான் சட்டத்தை பின்பற்றுபவன்'' என்றார்.

நீதிபதியிடமிருந்து இத்தகைய வார்த்தைகளை எதிர் பார்த்திராத லாலுவின் முகத்தில் ஈயாடவில்லை. ஆனால், தனக்கு யார் யார் போன்செய்தார்கள் என்ற விவரத்தை நீதிபதி வெளியிடவில்லை. நீதிபதியிடம் லாலு, சிறையில் குளிர் அதிகமாக இருப்பதாகவும் தன்னை   சந்திக்க யாரையும் அனுமதிக்க வில்லை எனக் குறைகூறினார். ''நீங்கள் தான் நீதிமன்றத்துக்கு வரும்போது பலரை சந்திக்கிறீர்களே… சிறை அறை அதிகமாகக்குளிர்கிறது என்றால், தபேலா அல்லது ஆர்மோனியம் வாசித்துக்கொண்டு இருங்கள்'' என்று நீதிபதி பதில்அளிக்க,  லாலுவுக்கு குளிரையும் மீறி வியர்த்துக் கொட்டியது. 

`நான் ஒன்றும் அறியாதவன். இந்தவழக்கில் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை' என்று நீதிபதியிடம் லாலு மீண்டும் கூறினார். 'நீங்கள்தான் அப்போது பீகார் முதல்வர். அதோடு, நிதித்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. நேரத்துக்கு ஏற்றாற்போல நடிக்கவேண்டாம். உங்களுக்கு இன்று நான் தண்டனை அளிக்கப் போவதில்லை நீங்கள் போகலாம்' என்று பதில் கூறினார்.

`சார்… நானும் ஒரு வழக்கறிஞர்தான் என்று நீதிபதியிடம் லாலு கூற, `அப்படியென்றால் சிறையில் படித்துபட்டம் வாங்கினீர்களா' என நீதிபதி வெடித்தார். சார்… அமைதியாகச் சிந்தித்தால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று லாலு சொன்னபோதுதான், தனக்குபோன் அழைப்புகள் வந்த விவரங்களை நீதிபதி வெளிப்படையாகச் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு வந்தார். 

தியோஹர் மாவட்ட கருவூலத்திலிருந்து ரூ.84.5 லட்சத்தை முறைகேடாக எடுத்தவழக்கில், தான் பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலுபிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். விசாரணைக் காலத்தின்போது 11 பேர் இறந்துவிட, ஒருவர் அப்ரூவர் ஆனார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் எனக் கடந்த டிசம்பர்மாதம் 23-ம் தேதி நீதிபதி சிவபால்சிங் அறிவித்தார். பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா உட்பட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் உடனடியாக சிறையில் அடைக்கப் பட்டனர்.

Leave a Reply