திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு வரங்களை அள்ளித் தருவதால் 'வரலட்சுமி' என பெயர் பெற்றாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை, நம் வீட்டுக்கு வரவேற்கும் நன்னாள் இன்று.

துறவியான ஆதிசங்கரர் கூட தனக்கு நெல்லிக்கனியை பிட்சை அளித்த பெண்மணிக்காக 'கனகதாரா ஸ்தோத்திரம்' பாடி லட்சுமியருளால் தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழியச் செய்தார்.கிருஷ்ணரைக் காண ஏழை குசேலர் வந்த போது, மகாலட்சுமி தன் கடைக்கண் பார்வையை அவர் வசித்த ஊரை இருந்த திசை நோக்கி திரும்பினாள். அந்த ஊரே செல்வத்தால் நிறைந்தது.

பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாகப் பிறந்த போது தன் கணவருடன் காட்டிற்குச் சென்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என ராமரைப் பிரியாமல் வாழ்ந்தாள். திருப்பதி ஏழுமலையான் மார்பில் தொங்கும் ஆரத்திற்கு லட்சுமி ஆரம் என்பர். லட்சுமி தாயார் அவரது இதயத்தில் குடியிருப்பதாக ஐதீகம்.

லட்சுமி தாயார் திருமாலின் மார்பை விட்டு பிரியாமல் இருப்பது போல சுமங்கலிகளும் தங்கள் கணவரின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களோடு ஒற்றுமையாக வாழ வரலட்சுமி நோன்பை மேற்கொள்கின்றனர்.இந்த நல்ல நாளில் அனைவருக்கும் சுமங்கலி பாக்கியம் நிலைக்க லட்சுமி தாயாரை வழிபடுவோம்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.