குமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்றுநடந்தது. இந்தகூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு சுசீந்திரம் கரியமாணிக்கபுரத்தில் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில் வந்தவர் வடசேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். இதனையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-

அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் பா.ஜனதா கட்சி பெருமிதம்கொள்கிறது. அம்பேத்கர் பிறந்த, வாழ்ந்த மற்றும் லண்டனில் படித்த இடங்கள் அனைத்தும் மறந்துஇருந்தது. அந்த இடங்களை கண்டறிந்து நினைவிடங்களாக மாற்றியபெருமை பிரதமர் நரேந்திரமோடியையே சேரும். அதுமட்டுமல்ல டெல்லியில் 200 கோடி ரூபாய் செலவில் அம்பேத்கர் பெயரில் ஆராய்ச்சிமையம் தொடங்கப்பட்டது. அவரது பெயரில் நாணயம் வெளியிடப்பட்டதோடு செல்போன் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இருந்த போதுதான்.

வேல்யாத்திரை நவம்பர் 6-ந் தேதி தொடங்கியது. இன்று நிறைவு பெற உள்ளது. வேல் யாத்திரைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது.

குறிப்பாக முருகபக்தர்களிடம் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேராதரவு இருந்தது. ஆனால் புயல்காரணமாக பல மாவட்டங்களில் யாத்திரையை நிறுத்திவிட்டோம். எனினும் எத்தனை தடங்கல் வந்தாலும், அத்தனை தடங்கல்களையும் மீறி எங்களுடைய வேல்யாத்திரை நடைபெறும்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக சொல்லியிருக்கிறார். அவர் தேசியபற்றாளர். ஆன்மிக வாதி. அவர் கட்சி தொடங்கட்டும். அதன்பிறகு எங்களது தேசிய தலைமையின் அறிவுரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பா.ஜனதா இருக்கிறதா? என கேட்கிறீர்கள். பொறுத்திருந்துபாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.