இந்தியாவில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சேனானி – நஷ்ரி சுரங்கப் பாதை, இந்தியாவின் சாலை போக்கு வரத்தில் திருப்பு முனையாக கருதப்படுகிறது. செனானி-நஸ்ரி இடையிலான 41 கிலோ மீட்டர் தூரம், இந்த சுரங்கப் பாதையால் இனி 10.9 கிலோ மீட்டராக குறைந்துவிடும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

9.2 கிலோமீட்டர் நீளமுள்ள செனானி-நஸ்ரி சுரங்கப்பாதை, பனி மற்றும் மழை காலத்திலும் செயல்படக் கூடியது. நாளொன்றுக்கு 27 லட்ச ரூபாய் அளவிலான எரிபொருள் என்ற விகிதத்தில், ஆண்டுதோறும் 99 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் இதனால் சேமிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதுகெலும்பாக இருக்கும் என்று வர்ணிக்கப்படும் இந்த சுரங்கப்பாதை, மாநிலத்தின் வருவாயை பெருக்கும், சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சுரங்கப்பாதை முழுமைக்கும் காற்றோட்டம் கிடைக்குமாறு, குறுக்கு காற்றோட்ட வசதியுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்தியாவில், இந்த வசதிகளுடன் அமைக்கப்படும் முதல் சுரங்கப்பாதை இதுதான். உலக அளவில் 6-ஆவது சுரங்கப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது. 2,519 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு இரண்டரை மணி நேரத்தில் செல்லமுடியும்.

சுரங்கப்பாதையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க 124 சி.சி.டி.வி கேமராக்களும், நவீன ஸ்கேனர் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மூன்றடுக்கு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், எப்போதும் போதுமான வெளிச்சமும் இருக்கும். சுரங்கப்பாதையில் மொபைல் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் வகையில், பி.எஸ்.என்.எல், ஏர்டெல், மற்றும் ஐடியா நெட்வொர்க் சிக்னல்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply